வேலூர்: வேலூர் மாவட்டம், ஊசூர் அருகேயுள்ள புலிமேடு கிராமத்தில் காளைகளை ஓட விடும் மஞ்சு விரட்டு விழாவானது நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், ஆற்காடு, வாலாஜா, அனைக்கட்டு, குடியாத்தம், சித்தூர் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போட்டியில் ஓட விடப்பட்டன. காளைகள் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க நடுவே அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் சீறிப்பாய்ந்து ஓடின.
குறைந்த வினாடியில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் விழாவினை கண்டு ரசித்தனர். இதில் காளைகள் முட்டியதில் பெண் காவலர் உட்பட பலர் காயம் அடைந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி மாடு ஓடுபாதையில் இருந்த மக்கள் கூட்டத்தை கலைத்தனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல் கொண்டாட்டம்..கும்பகோணத்தில் பிரம்மாண்ட கோலப்போட்டி!
அதேபோல, வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகேயுள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டன.