சென்னை:இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 4-ஆவது நாளான நேற்று (நவ.8) 4-ஆவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
கிராண்ட் மாஸ்டர்ஸ்: மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி பலப்பரீட்சை நடத்தினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றதுடன், அமீன் தபதாபேயியை கீழே இறக்கி பட்டியலில் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது போர்டில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, செர்பியாவின் அலெக்ஸி சரானாவை எதிர்கொண்டார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த ஆட்டம் 119-ஆவது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 3-ஆவது போர்டில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், இந்தியாவன் அரவிந்த் சிதம்பரத்துடன் மோதினார். இதில் அரவிந்த் சிதரம்பரம் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டம் 17-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-ஆவது போர்டில் பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், இந்தியாவின் விதித் குஜ்ராத்தியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 50-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
ஏழு சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 4 சுற்றுகளின் முடிவில், அர்ஜுன் எரிகைசி 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். லெவோன் அரோனியன் 2.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அமீன் தபதாபேயி 2.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 2 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 2 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 1.5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், விதித் குஜ்ராத்தி ஒரு புள்ளியுடன் 7-வது இடத்திலும், அலெக்ஸி சாரானா 1 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
தொடரின் 5-ஆவது நாளான இன்று (நவ.09) 5-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் விதித் குஜ்ராத்தி, அமீன் தபதாபேயியுடன் மோதுகிறார். லெவோன் அரோனியன், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவை சந்திக்கிறார். அலெக்ஸி சாரானா, அரவிந்த் சிதம்பரத்துடன் மோதுகிறார். அர்ஜுன் எரிகைசி, பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.