சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த நவ.05 தொடங்கி இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தொடரின் 6வது நாளான நேற்று (நவ.10) 6வது சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது.
மாஸ்டர்ஸ் பிரிவு:மாஸ்டர்ஸ் பிரிவில் 1வது போர்டில் விளையாடிய ஈரான் நாட்டை சேர்ந்த அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார்கள். இருவருக்கு இடையேயான ஆட்டம் 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
2-வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அரவிந்த் சிதம்பரமும், அர்ஜுன் எரிகைசியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். உலகத்தர வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கும் அர்ஜுன் எரிகைசி கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டியில் அர்ஜுன் எரிகைசி தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்திடம் 48-வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதுவரை நடந்த 5 சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்காத அர்ஜுன் எரிகைசி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளார்.
3-வது போர்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் செர்பியாவின் அலெக்ஸி சரானாவை எதிர்கொண்டார். இருவருக்கு இடையே நடந்த இந்த ஆட்டம் 31வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4 வது போர்டில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தியும், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த லெவோன் அரோனியனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 64வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அர்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் அரோனியன் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் 3.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஈரானின் அமீன் தபதாபேயி 3.5 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 2.5 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், விதித் குஜ்ராத்தி 2 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், அலெக்ஸி சரானா 2 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இத்தொடரின் கடைசி நாளான இன்று (நவ.11) கடைசி மற்றும் 7-வது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில், லெவோன் அரோனியனும் அமீன் தபதாபேயியுடன் மோதுகின்றனர். அலெக்ஸி சாரானா, விதித் குஜ்ராத்தியை சந்திக்க உள்ளார். அர்ஜுன் எரிகைசி, மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பர்ஹாம் மக்சூட்லூ, அரவிந்த் சிதம்பரத்துடன் மோதுகிறார்.