சென்னை: உலக செஸ் சாம்பியனான டி.குகேஷுக்கு, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் பாராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 'ஆளுநர் ஆர்.என். ரவி உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வந்தவரும், இதுவரை இச்சாதனையை நிகழ்த்தியவர்களிலேயே மிகவும் இளையவராகவும் விளங்கும் உலக செஸ் சாம்பியன் கிராண்ட்மாஸ்டர் @DGukesh
அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையை கொண்டாடும் நிகழ்வில் அவரையும் அவரது பெருமைமிக்க பெற்றோர் டாக்டர். ஜே. பத்மகுமாரி, டாக்டர். ரஜினிகாந்த் ஆகியோரையும் ஆளுநர் மாளிகையில் சிறப்பித்தார்.
வளர்ந்து வரும் இளம் இந்தியாவின் அடையாளமாக குகேஷை பாராட்டிய ஆளுநர், அவரை தேசிய பெருமிதத்தின் ஆதாரம் என்றும் நமது இளம் திறமையாளர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும் விளங்குவதாக பாராட்டினார். தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்தில் தேசத்துக்கு மென்மேலும் பெருமைகளைச் சேர்க்கவும் வாழ்த்தினார்.' என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் பட்டம் போட்டியில் சீன வீரரான டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான டி.குகேஷ். அவருக்கு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் (டிச.17) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் குகேஷை பாராட்டி பேசினர். அத்துடன், தமிழக அரசு அறிவித்த 5 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையை, அந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் குகேஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.