பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஹெலன் மரூலிஸ் என்பவரை எதிர்கொண்டார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பான் அமெரிக்கன் விளையாட்டு போட்டி மற்றும் 2015ஆம் ஆண்டு லாஸ் வேகாசில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்கா வீராங்கனை ஹெலன் மரூலிஸ் ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி கொடுத்தார்.
அபாரமாக விளையாடிய அமெரிக்கா வீராங்கனை ஹெலன் மரூலிஸ், அன்ஷு மாலிக்கை புள்ளிகள் சேர்க்க விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்டம் கடுமையானது. இறுதியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் மரூலிஸ் 7-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவினார்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக்கின் கால் இறுதி கனவு கரைந்து போனது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த அன்ஷு மாலிக் தொடரை விட்டு வெளியேறினார். முன்னதாக ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வடக்கு மசடோனியாவை சேர்ந்த விளாடிமிர் எக்ரோவ் என்பவரை எதிர்கொண்டார்.
அபாரமாக விளையாடிய அமன் ஷெராவத், வடக்கு மசடோனியா வீரரை கிடுக்குபிடி நகர்வுகளால் திணறிடித்தார். இறுதியில் அமன் ஷெராவத் 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதியில் வெற்றி பெற்று ஆடவர் மல்யுத்ததில் இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை அமன் ஷெராவத் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் ஷெராவத் கால் இறுதிக்கு தகுதி! - Paris Olympics 2024