கான்பூர்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
2வது நாள் ஆட்டத்துக்கு என்னாச்சு?:
நேற்று (செப்.27) முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை மற்றும் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று (செப்.28) இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் காலை முதலே கான்பூரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேச அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்து இருந்தது. அந்த அணியில் மொமினுல் ஹக் (40 ரன்), முஸ்பிகுர் ரஹிம் (6 ரன்) ஆகியோர் அவுட்டாகாமல் உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.