ஐதராபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வங்கதேசம் சரசரவென முன்னேறி உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு இறங்கியது.
கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல் புள்ளிப் பட்டியலில் இந்தியா 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 3வது இடத்திலும் உள்ளதுஜ. அதையடுத்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் முறையே 5, 6 மற்றும் 7 வது இடங்களில் உள்ளன. முன்னதாக இலங்கை அணி 4வது இடத்தில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக சரிவை சந்தித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது வங்கதேச அணிக்கு இதுவே முதல்முறை. அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக வெளிநாட்டு வெற்றிகளை குவித்த அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 4 டெஸ்ட் தொடர் வெற்றிகளை குவித்து உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த படியாக இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா இரண்டு வெளிநாட்டு தொடர்களை கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் அங்கம் வகிக்கின்றன.
இதையும் படிங்க:கோட் படத்தில் எம்எஸ் தோனி! பரவும் புதிய தகவல்! என்னாவா இருக்கும்? - The Goat Movie MS Dhoni Cameo