பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக் விளையாட்டு தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நவதிப் தங்கம் வென்றார். முதலில் நவதிப் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், தங்கம் வென்ற வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருடைய இடத்திற்கு நவதிப் சென்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான F41 பிரிவில் கலந்து கொண்டு ஈட்டி எறிந்த இந்திய வீரர் நவதிப் 47.32 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஈரானை சேர்ந்த Beit Sadgeh 47.64 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியதாக ஈரான் வீரர் Beit Sadgeh தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவரிடம் இருந்த தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நவதிப் தானாக முதலிடத்திற்கு முன்னேறியதால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியா 7வது தங்கத்தை தட்டிச் சென்றது.
மேலும், ஆடவர் ஈட்டி எறிதல் F41 பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் நவதிப் பெற்றார். 23 வயதான நவதிப் கடந்த டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். பாராலிம்பிக்சில் பதக்கம் வென்ற நவதிப் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.