தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வைகுண்ட ஏகாதசி: திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் கோலாகலத் துவக்கம்.. பரமபத வாசல் திறப்பு எப்போது? - VAIKUNTHA EKADASHI

திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று வெகுசிறப்பாகத் துவங்கியது.

திருச்சி ஶ்ரீரங்கம் கோயில்
திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 9:53 AM IST

திருச்சி:ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பகல் பத்து இரவு பத்து என 20 நாட்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி (Vaikuntha Ekadashi) திருவிழா நேற்று முதல் துங்கியுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 10ஆம் தேதி பரமபத வாசல் திறந்திருக்கும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படுகிறது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (டிச.30) துவங்கியது. பகல் பத்து இரவு பத்து என உற்சவம் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும்.

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று (டிசம்பர் 31) தொடங்கியது. இன்றைய தினம் காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுனா மண்டபம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிர பந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

மின்விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் (ETV Bharat Tamil Nadu)

பின்னர், இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதேபோல் பகல் பத்து திருவிழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுனா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான வருகிற ஜனவரி 9ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார்.

இதையும் படிங்க:அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் வழக்கை எதிர்கொள்ள சட்டக்குழு... அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

மேலும், ஜனவரி 10ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். அன்றைய தினம் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மின்விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் கோபுரம் (ETV Bharat Tamil Nadu)

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆனால், ராப்பத்து 8ஆம் திருநாளான ஜனவரி 17ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. தொடர்ந்து, 18ஆம் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19ஆம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details