தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival - MADURAI CHITHIRAI FESTIVAL

Madurai Chithirai Festival: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

Madurai Chithirai Festival
மதுரை சித்திரைத் திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:00 AM IST

Updated : Apr 22, 2024, 7:45 AM IST

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை: மதுரை மாநகர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், மீனாட்சியம்மன் அரசாலும் பூமி என்பது தனி சிறப்பு. திருவிழாவிற்கு பெயர் பெற்ற மதுரையில், இந்த மதுரை மாநகரே கோலாகலமாகக் கொண்டாடும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும். அந்த வகையில், மக்கள் கொண்டாடி தீர்க்கும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு 2024 ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா தொடங்கிய நாள் முதலே, ஒவ்வொரு நாளும் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளில் (ஏப்.19) மதுரையில் அரசாட்சி நடத்தும் மீனாட்சியம்மன் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக பட்டாபிஷேகம் நடைபெற்றது. 9ஆம் நாளில் (ஏப்.20) சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைக்கும் நிகழ்வான 'திக் விஜயம்' நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, 10ஆம் நாளான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், விழாவில் பங்கேற்ற திருமணமான பெண்கள் புதிய மாங்கல்யக் கயிறு அணிந்துகொண்டனர்.

இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று (ஏப்ரல் 22) கோலாகலமாக தொடங்கியது. இதற்காக அம்மனும், சுவாமியும் அதிகாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள ம.முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர்.

சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், மீனாட்சியம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள, அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.

கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வழியாக வலம் வந்து, இன்று நண்பகல் நிலையை அடையும். தேர் வலம் வரும் நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இதன் காரணமாக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சித்தரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று மதுரை மூன்றுமாவடி அருகே அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம்..மாறாத அன்பு வச்ச மகராசி.. தீர்க்க சுமங்கலி வரம் தருவாள் மீனாட்சி..! - Meenakshi Thirukalyanam

Last Updated : Apr 22, 2024, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details