அயோத்தி :உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜன.22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து கர்நாடக சிற்பி வடிவமைத்த ராம் லாலா எனப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் ராமர் சிலையில் தலை தொடங்கி பாதம் வரை அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ராமரின் தலையில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கீரிடம், காந்தா என்று அழைக்கப்படும் கழுத்தணி, மோதிரங்கள், வெள்ளி சிவப்பு திலகம் என அணியப்பட்டு இருந்த அனைத்து ஆபரணங்களும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பலரும் நன்கொடை அளித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி முகேஷ் படேல், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளார். இந்த கிரீடம் 6 கிலோ எடை கொண்டதாகும், இந்த கிரீடம் நான்கரை கிலோ தங்கத்தை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.