சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்ததை குறித்து அரசியல் வட்டாரங்களில் கொள்கை ரீதியான பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளது. விஜய் பெரியாருக்கு மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கும், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து கூறியிருந்தார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று தனது அரசியல் கட்சியை அறிவித்தார். ஊழலற்ற, சாதி, மத வேறுபாடுகள் இல்லாத, தன்னலமற்ற, வெளிப்படையான, தொலைநோக்கு மற்றும் திறமையான நிர்வாகத்திற்காக தமிழக மக்கள் ஏங்குவதாகவும் விஜய் கூறியிருந்தார்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளது. விஜயின் கட்சி பெயர், கொடியில் இடம்பெற்றுள்ள விஷயங்கள், கட்சியின் கீதம் என அனைத்தையும் வைத்து பார்த்தால், தமிழ் தேசியத்தை மையப்படுத்தி மாநில தேர்தலை சந்திக்கும் மிகப்பெரிய செல்வாக்குமிக்க நபர் என்றே விஜயை சொல்லலாம். மேலும், தவெக கொடிக்கு ஆழமான அர்த்தம் இருப்பதாக தெரிவித்துள்ள விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் அதுகுறித்து விளக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் மீட்டெடுக்க திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை நிறுவிய பெரியாரால் தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் திராவிடம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசுபவர்களை உள்ளடக்கி, திராவிட நாடு என்பதற்கு பெரியார் ஆதரவளித்தார்.
திராவிட கழகத்தில் இருந்த அண்ணாதுரை 1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் 1957 இல் தேர்தல் களத்தில் இறங்கிய திமுக 10 ஆண்டுகள் கழித்து 1967 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அப்போது பெரியார் விடுதலை நாளிதழில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ஆளும் கட்சியின் (திமுகவில்) திராவிடம் என்ற சொல் மற்றும் கொடியில் சிவப்பு - கருப்பு நிறங்கள் இருக்கும் வரை சமூக சார்பு கொள்கைகள் அப்படியே இருக்கும் என்றார்.
திமுகவில் இருந்து பிரிந்து உருவான அ.தி.மு.க, ம.தி.மு.க கட்சிகள் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளின் கொடியிலும் கருப்பு, சிவப்பு இருக்கும். மேலும், மேற்கண்ட மூன்று கட்சி பெயரிலும் திராவிடம் என்பது தெளிவாக இடம்பெற்றிருக்கும். ஆனால், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் காணப்படுவது போல, திராவிட சாயல் எதுவும் விஜயின் கட்சியில் இல்லை.
ரசிகர் மன்றத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசியல் கட்சி திராவிடத்தை குறிக்காமல், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் மாறியுள்ளது. தவெக-வின் பாடல் வரிகளும், அனிமேஷன் காட்சிகளும் பல அம்சங்களில் தமிழின் பெருமையை அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக, 'ஆதிக்குடியை காக்கும் கொடி' என்ற வரி அதனை முன்னிறுத்துகின்றன.
கட்சி பாடலின் வீடியோவில் இரண்டு 'கருப்பு' யானைகளில் சவாரி செய்பவர்கள் மக்கள் மீது சாட்டையால் அடித்து ஒடுக்குவதைக் காட்டப்படுகிறது. அப்போது, விஜய் ஒரு குதிரையில் வருவது போலவும், அதே நேரத்தில் இரண்டு சாம்பல் நிற யானைகள் அடக்குமுறைகளுக்கு எதிராக நின்று கருப்பு யானைகளை வீழ்த்துகின்றன. அப்போது, வெற்றி பெற்ற போர் யானைகள் தங்களது தலைவனுக்காக எக்காளம் முழங்க, அனிமேஷன் செய்யப்பட்ட விஜய் கட்சி கொடியுடன் நிற்கிறார்.
முன்னதாக தவெக கொடியை அறிமுகம் செய்தபோது விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களை சந்திக்கையில், தனது மகன் விஜய் தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்டுவார் என்றார். மேலும், விஜய் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்கள் பயன்பெறும் புரட்சிகர கொள்கைகளை கொண்டு வரவும் கேட்டுக் கொண்டார்.
நடிகராக விஜய் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 2008ல் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது, இலங்கைத் தமிழரான தனது மனைவி சங்கீதாவுடன் ஒருநாள் உண்ணாவிரதத்தையும் நடத்தினார். அப்போது பேசிய விஜய் '' அங்கு இருக்க இடமில்லாமல், உடுத்த உடை இல்லாமல், சாப்பாடு இல்லாமல் ஈழத் தமிழர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் உணவின்றி பட்டினி கிடக்கக் கூடாதா?'' என கூறினார்.
சினிமாவை விட்டுவிட்டு முழு அரசியல்வாதியாக களம் இறங்கியுள்ள விஜய் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மத்தியில் தமிழ் தேசிய அரசியலை எவ்வாறு கையாளப்போகிறார் என்பது பின்னாளில் தெரிய வரும்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்