ஈரோடு:தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி, முதற்கட்டமாக ஈரோடு காந்தி சிலை முன்பு இன்று (பிப்.2) பேரணி தொடங்கினர். மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர், இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்தால், ஜிஎஸ்டி கணக்கில் சிக்கல் வராது என்று தமிழக அரசு வியாபாரிகளுக்கு உறுதி அளித்துள்ளதாக கூறினார். முன்னாள் முதலமைச்சர் அண்ணா அரசு, அதிகாரிகள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்ற சட்டத்தை தற்போதைய தமிழக அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை எனக் கூறினார்.
உள்நாட்டு வணிகர்களே அதிகளவு தமிழில் பெயர் பலகைகள் வைத்துள்ள நிலையில், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப்பலகை வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 7-இல் அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகளுடன் நடக்க உள்ள கூட்டத்திற்குப் பிறகு, தமிழில் பெயர் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்படும் என்றார். மேலும், “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றம் பட்ஜெட்டாக உள்ளது.
ரூ.10 லட்சம் வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும், ஒருவித அறிவிப்பும் இல்லை. அனைத்து வரி பொருட்களுக்கும் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஜிஎஸ்டி சட்டத்தை எளிமையான சட்டமாக மாற்ற வேண்டும்” என கூறினார்.
காலாவதியான சுங்கச்சாவடி அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்னபடி, இதுவரை காலாவதியான எந்த சுங்கச்சாவடியும் அகற்றவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள 300 யூனிட் சோலார் மின்சாரம், 1 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் கொடுப்பது என இரண்டு நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மழை - வெள்ளம் பாதிப்பு காரணமாக வாழ்வதாராம் பாதிப்பு ஏற்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், காப்பீடு நிறுவனங்கள் கடைகளுக்கு, பாதிப்பு நேரத்தில் இழப்பீடு கேட்கும்போது காப்பீடு தருவதற்கு மாற்று காரணத்தை கூறி இழப்பீடு தர மறுக்கிறார்கள். இது போன்ற தனியார் காப்பீடு நிறுவனங்கள் முகத்திரையைக் கிழித்து எறிய விரைவில் தமிழ்நாடு வணிக சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விரைவில் எங்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் வியாபாரிகள் கோரிக்கைகளை கேட்டுப் பெற இருப்பதாக வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?