வேலூர்: உலகம் முழுவதும் புத்தாண்டை (New Year 2025) வரவேற்க மக்கள் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக, நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் இரவில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலப் புத்தாண்டு (2025) தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் உத்தரவின் பேரில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 01 வரை, வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மேலும், மாவட்டம் முழுவதும் குற்றங்களைத் தடுக்க 22 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Four Wheeler Patrol) 60 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் (Two Wheeler Patrol) மூலமாக கண்காணிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க, மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் வாகன தணிக்கை (Vehicle Check points) மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. புத்தாண்டை முன்னிட்டு சாலைகளில் மாற்றம் - முழு விவரம் உள்ளே!
வேலூர் மாவட்டத்தில், முக்கியமான 180 இடங்களில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்துகளைச் சீர் செய்ய போக்குவரத்துக் காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு தனிப்படையும் பாதுகாப்பு மற்றும் விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் டிரோன்கள் (Drone) மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த பாதுகாப்புப் பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 207 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 513 காவல் ஆளிநர்கள், 70 ஆயுதப்படை காவலர்கள், 116 ஊர்காவல் படையினர் உட்பட மொத்தமாக 939 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள்:
தற்போது, புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து பைக் ரேஸ் செல்லது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். அதேபோன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்' செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும்.
பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள். குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான புத்தாண்டினை கொண்டாடுமாறு மாவட்ட காவல்துறையின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.