சென்னை: கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன் தீயணையப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டிடங்கள் அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் படி கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.
அந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணையணைப்பு துறை தடையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த அரசானையை ரத்து செய்யக் கோரி சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அதிகாரி எம்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: மாநிலத் தலைவர் பதவியை பெண்ணுக்கு விட்டுக் கொடுப்பீர்களா? திமுகவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
அந்த மனுவில், தீயணைப்பு துறை வழங்கி வரும் தடையில்லா சான்றை தனியார் மூலம் வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது சட்டவிரோதமானது? என்றும், தீயணைப்பு துறை தான் அவ்வப்போது ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.மேலும் தனியார் மூலம் வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று என்பது புதிய நடைமுறைகளின் படி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பது மிகவும் ஆபத்தானது எனவும், இது ஊழலுக்கு வழிவகுக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.