தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சியும், இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும்! - bangladesh crisis 2024 - BANGLADESH CRISIS 2024

வங்கதேசத்தில் அண்மையில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அங்கு பொறுப்பேற்றுள்ளது.

tஷேக் ஹசீனா, பிரதமர் மோடி -  கோப்புப்படம்
ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி - கோப்புப்படம் (Image Credit - ANI)

By DR Ravella Bhanu Krishna Kiran

Published : Aug 13, 2024, 10:50 PM IST

Updated : Aug 13, 2024, 11:07 PM IST

ஹைதராபாத்: வங்கதேசத்தில் வெடித்த மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5 ஆம் தேதி (ஆகஸ்ட் 5) தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், ஆகஸ்ட் 8 ஆம் தேதி வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இடைக்கால அரசாங்கத்தில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி (JeI) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த இடைக்கால ஆட்சி இந்திய -வங்கதேச உறவில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அடுத்து நடைபெறும் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வருவதும், கலிதா ஜியா வங்கதேசத்தின் பிரதமராவது நடக்கலாம்.

இந்த சாத்தியமான மாற்றம் நிகழ்ந்தால், அது தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதத்திலும், இந்தியாவின் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகவும் இருக்கக்கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கதேசத்துடனான அதன் உறவு அகதிகள் விஷயம், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், வங்காள விரிகுடா, இராணுவ ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களால் மதிப்பிடப்படுகிறது.

இந்தியா -வங்கதேசம் இடையேயான தொடர்பு:வங்கதேசம் இந்தியாவுடன் மொத்தம் 4,096 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, இதில் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகியவை அடங்கும். அத்துடன் தமது வர்த்தகத்தை மேம்படுத்த வங்காள விரிகுடாவுடனும், மேற்கு வங்கத்துடனும் வங்கதேசத்தின் தொடர்பு உள்ளது.

இந்த நிலையில், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவில் தற்போது ஏற்பட்டுள்ள சீர்குலைவு, அந்நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் தற்போதைய சாலை வழித்தடங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்ல சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் நவம்பர் 2023 இல் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா குறுக்கு-எல்லை ரயில் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

இதைவிட முக்கியமாக சிலிகுரி காரிடார் என்பது இந்திய நிலப்பரப்பை வடகிழக்கு பகுதியுடன் இணைக்கும் ஒரு முக்கியமான வழித்தடமாகும். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் ஏதேனும் தடங்கல், சிக்கல் ஏற்பட்டால், இந்தியாவின் மூலோபாய நிலப்பரப்பில் இருந்து இப்பகுதியை பிரிப்பதன் மூலம், அது சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும்படி ஆகக்கூடும்.

அகதிகள் அபாயம்:வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல் காரணமாக, அந்நாட்டின் எல்லை வழியாக அகதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. இந்தியாவில் அகதி அந்தஸ்து மற்றும் அரசியல் தஞ்சம் கோரும் ஹசீனாவின் ஆதரவாளர்கள், குறிப்பாக சிறுபான்மை இந்துக்கள், புதிய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பற்றவர்களாக உணரலாம். இது வடகிழக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டு, மேகாலயா அதன் சர்வதேச எல்லையில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

பயங்கரவாதம்:புவியியல்ரீதியாக பின்தங்கிய வடகிழக்கு பகுதியைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்கள் வங்கதேசத்தில் செயல்படுவதால், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் முக்கிய அம்சமாகும். தவிர, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களிடமிருந்து இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த குழுக்கள் இந்தியாவிற்குள் நுழைய வங்கதேசத்தை ஒரு போக்குவரத்து பாதையாக பயன்படுத்துகின்றன.

ஹசீனாவின் ஆட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையை அமல்படுத்தியது மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒடுக்கியது, புலனாய்வுப் பகிர்வின் அடிப்படையில் புதுதில்லியுடன் டாக்கா நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணியது. அத்துடன் 2013 இல் இந்தியாவுடன் மேற்கொண்ட நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் மூலம், ஐக்கிய விடுதலை முன்னணியின் (ULFA) செயல்பாட்டாளர்கள் பலரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆனால், கலீதா ஜியா (1991-1996 மற்றும் 2001-2006) ஆட்சியின்போது, ​​வங்கதேசம் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. மேலும், இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு வங்கதேசம் வழியாக தப்பிச் செல்ல தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்தது. BNP-JeI கூட்டணி அரசாங்கம், உல்ஃபா, நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN), மற்றும் அனைத்து திரிபுரா டைகர் ஃபோர்ஸ் (ATTF) போன்ற வடகிழக்கு பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள், நிதி உதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை அளிக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உதவியது. கொரில்லா போர் பயிற்சிக்காக கிளர்ச்சியாளர்கள் டாக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றனர்.

வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் ஐஎஸ்ஐ ஆதரவுடன் சாத்தியமான BNP-JeI அரசாங்கம், மேற்குறிப்பிட்டுள்ள குழுக்களுக்கு அடைக்கலம் அளிக்கலாம். அத்துடன் வங்கதேச பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி (ஹுஜி) பாகிஸ்தானிய பயங்கர அமைப்புகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து ஆதரவைப் பெறுவது வடகிழக்கில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டலாம். மேலும், ஜியாவின் மகன் தரேக் ஐஎஸ்ஐயுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார் மற்றும் உல்ஃபா தலைவர் பரேஷ் பருவா, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பயங்கரவாத செயல்பாட்டாளர்கள் நிச்சயமாக இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

வங்காள விரிகுடா:வங்காள விரிகுடாவின் உச்சியில் அமைந்துள்ள வங்காளதேசம், ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரையிலான இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது கடல் எல்லையை கொண்டுள்ளது. இது உலகின் முக்கிய கடல்சார் பகுதியான மலாக்கா ஜலசந்திக்கு அருகாமையில் இருப்பதால் இந்தியாவின் முதன்மை நலன்களை உறுதிசெய்வதில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. மலாக்கா ஜலசந்தி இந்தியப் பெருங்கடலை தென்சீனக் கடலுடன் இணைக்கிறது.

அதன்படி, வங்காள விரிகுடாவில் தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும், பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்துவரும் மற்றும் ஆக்கிரமிப்பு இருப்பை முறியடித்து தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும டாக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவது இந்தியாவின் முக்கியப் பணியாகும். தற்போதைய அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியாக நாளை கலிதா ஜியா தலைமையிலான அரசாங்கம் அமைந்து வங்கதேச உடனான உறவுகள் மோசமடைந்தால், வங்காள விரிகுடாவில் இந்தியா தனது கட்டுப்பாட்டை இழக்கக்கூடும். ஏனெனில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்த வங்கதேசத்துக்கு பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை வழங்குவதன் மூலம் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

இராணுவ ஒத்துழைப்பு:இந்தியா வங்கதேசத்துடன் நீண்டகால மூலோபாய கூட்டுறவை உருவாக்கி வருகிறது. மேலும் அது சீனாவின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சென்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது. இதற்காக புதுதில்லி மற்றும் டாக்கா கூட்டு ராணுவப் பயிற்சியான 'சம்ப்ரிதி' பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. மேலும் மருத்துவம் மற்றும் ராணுவ உபகரணங்களை இந்தியா வங்கதேசத்துக்கு அளித்து வருகிறது.

அத்துடன் பாதுகாப்பு வன்பொருள், கடலோர காவலுக்கான நவீன படகுகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் கடனுதவியின்கீழ் இந்தியாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் அதன் ரஷ்ய வகையைச் சேர்ந்த MiG-29 மற்றும் Mi 17 ஹெலிகாப்டர்களின் பராமரிப்புக்கான உதிரிபாகங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, இருநாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்புக்கு தடையாக அமைக்கக்கூடும். இது ஒரு காலத்தில் படிப்படியாக விரிவடைந்து சீனாவுக்கு சாதகமாக போகலாம்.

அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை வங்கதேசத்தில் தங்களின் செல்வாக்கை செலுத்துவதற்கும், BNP-JeI தலைமையிலான இந்திய எதிர்ப்பு ஆட்சியை நிறுவுவதற்கும் மோசமான திட்டங்களைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

‘ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலைக்குப் பிறகு, கோண்டகர் மோஸ்தாக் அஹ்மத் தலைமையிலான இந்திய விரோத ஆட்சியை நிறுவியதன் மூலம் கடந்த காலங்களிலும் அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, ​​ஷேக் ஹசீனாவின் அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

மேலும் ஐ.எஸ்.ஐ.யால் பயிற்றுவிக்கப்பட்ட Jel -இன் மாணவர் பிரிவான இஸ்லாமி சத்ரா ஷிபிரின் (ICS), வங்கதேசத்தில் அண்மையில் வெடித்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. அமைதியாக தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதற்கு வங்கதேசத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக சீனா பரப்பிய வதந்திகள் முக்கிய காரணமாக இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நேரத்தில் எழுந்துள்ள சவாலைச் சமாளிக்க, இந்தியாவின் முதன்மையான மற்றும் கிழக்குக் கொள்கையில் ஒரு முக்கிய பங்காளியாகவும், BIMSTEC இல் நம்பகமான கூட்டாளியாகவும் இருக்கும் வங்கதேசம், ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய அரசாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். அதற்கு தன்னாலான மற்றும் சர்வதேச அளவிலான முன்னெடுப்புகளை இந்தியா விரைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

மாறாக, ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வங்கதேசத்தின் புதிய அரசாங்கம் இந்திய விரோத அணுகுமுறையைத் தொடர்ந்தால், ஐஎஸ்ஐ சார்பு, சிஐஏ சார்பு எர்ஷாத் ஆட்சிக்கு (1983-1990) எதிராக ஒரு எழுச்சியை வடிவமைத்த R&AW இன் "ஆபரேஷன் ஃபேர்வெல்" போன்ற ஒரு செயலை இந்தியா பரிசீலிக்க வேண்டும்.

(குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஈடிவி பாரத் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை)

இதையும் படிங்க:சமூகப் பொறுப்பின் உருவகமாகவும், பேரிடர் காலங்களில் மீட்பராகவும் விளங்கும் ஈநாடு!

Last Updated : Aug 13, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details