ஹைதராபாத்:ராமோஜி ராவ் இந்த பெயரில் ஒரு வீரியம், புத்தாக்கம் , அர்ப்பணிப்பு உள்ளிட்ட குணங்கள் தொனிக்கின்றன. இவரது பரந்த பயணத்தில் சவால்கள் என்பவை வெறும் தடைக்கற்களல்ல, இவராகவே விரும்பி ஏற்றுக் கொண்ட சாகசங்கள். இந்த ஒவ்வொரு சாகச தருணங்களையும் புத்தாக்க படைப்பு, மாற்றங்களை புகுத்துவது என பயன்படுத்திக் கொண்டவர். தான் வழிநடந்த பவ்வேறு துறைகளிலும், சமரசமில்லாத பொறுப்புணர்வுடன், குழுவாக செயல்படுவதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு படைப்புலகின் பல்வேறு பக்கங்களையும் ஆய்ந்தறிந்தவர்.
இவரது இடையறாத முயற்சியின் காரணமாக தெலுங்கு பத்திரிகை உலகம், சாமானிய மக்களுக்கு புரியும் வகையிலான மொழியாக்கத்தை கையிலெடுக்கத் துவங்கியது. தெலுங்கு பேசும் மக்களுக்கு ராமோஜி ராவ் என்ற பெயர் உத்வேகமூட்டக் கூடியதாக உள்ளது. இவரது தொலைநோக்குப் பார்வை இதழியல் என்பதைத் தாண்டியும் இலக்குகளைக் கொண்டது. தெலுங்கு மொழியின் தொன்மையை பாதுகாத்து பரப்ப வேண்டும் என்ற நோக்கம் இவருக்கு இருந்தது. ஆங்கிலத்தின் தாக்கத்தை உணரத் தொடங்கிய நேரத்தில் தெலுங்கு மொழியின் தூய்மைக்கு பாதுகாவலராக விளங்கியவர் ராமோஜி ராவ். அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என இரண்டிலுமே அவர் எடுத்த முன்னெடுப்புகள் தெலுங்கு மொழியின் அடையாளத்தையும் பெருமையையும் மீட்டெடுப்பதாக அமைந்தன.
ராமோஜி அறக்கட்டளை அவரது பொறுப்புணர்வுக்கு ஒரு உதாரணமாக நின்று , மொழியியல் மற்றும் கலாச்சார புத்தாக்கத்திற்கு களமாக அமைந்தது. "தெலுகு வெலுகு" (தெலுங்கு வாழ்க) என்பது போன்ற முன்னெடுப்புகள் மூலம் மொழி ஆர்வலர்கள் மத்தியில் தெலுங்கு இலக்கியத்திற்கான ஆர்வத்தீயை பற்ற வைத்தார். " ஒரு நாட்டின் உயிரே மொழிதான்" என்ற அவரது தீர்மானமான முடிவு, எதிர்கால சந்ததியினரின் மனதில் மொழி மீதான காதலை ஆழமாக ஊன்றியது.
ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியது ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமானதோடு, உலக அரங்கில் தெலுங்கு சினிமாவின் தரத்தை கொண்டு போய் நிறுத்தியது. உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு மையமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சினிமா உலகின் மையமாக மாறியுள்ள ஃபிலிம் சிட்டி, இந்திய துணைக்கண்டத்தின் படைப்பாளிகளை தன்னை நோக்கி ஈர்ப்பதாக உள்ளது. இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தொலைக்காட்சி சேவையை தொடங்கியதால், ஐதராபாத் மாநகரை கலாச்சார கேந்திரமாக உருவாக்கியது இவரின் மற்றுமொரு சாதனை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற ராமோஜியின் நோக்கை தெளிவுபடுத்துவதாகவும் இது அமைந்தது.
இதழியல், காட்சி ஊடகம் என்பதைத் தாண்டி தொழில்துறை வல்லுநர், செய்தி ஆசிரியர், ஸ்டூடியோ நிறுவனர் என பன்முகங்களைக் கொண்டவர் ராமோஜி ராவ். இருப்பினும், இதழியலாளர் என்பதே அவரது பிரதான அடையாளமாக திகழ்ந்தது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக செயல்பட்டபோது, இதழியல் துறையில் ஒருங்கிணைப்பு, தொழில் நேர்மை போன்றவற்றை பேணியதன் மூலம் சக இதழியலாளர்களால் விதந்தோதப்பட்டார்.