ஐதராபாத்:அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு படி, இந்தியாவுடனான அணுகுமுறையை மென்மையாக கையாள தொடங்கி உள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த முகமது முய்சு, மாலத்தீவுக்கு வழங்கிய கடனை திரும்பப் பெறுவதில் இந்தியா மென்மையான போக்கை கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 400 புள்ளி 9 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் தொகையை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் மாலத்தீவு உள்ளது. மாலத்தீவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான 6 புள்ளி 190 பில்லியன் டாலரில் இந்தியாவுக்கான கடனை திருப்பிச் செலுத்தவது என்பது கடினம் தான் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மாலத்தீவின் ஒட்டுமொத்த கடன் 3 புள்ளி 577 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அதில் 42 சதவீதம் சீனாவுக்கு மட்டும் வழங்க வேண்டி உள்ளது. இந்தியாவுக்கு மட்டும் 517 மில்லியன் டாலர் கடன்பட்டு உள்ளது மாலத்தீவு. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மாலத்தீவுக்கு 93 மில்லியன் டாலர் கடனாக வழங்கி உள்ளது.
மாலத்தீவின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடை அதிபர் முகமது முய்சு கொண்டு இருந்த போதும், இந்த கடன் தொகை மாலத்தீவின் பட்ஜெட்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடினமான காலங்களை எதிர்கொண்ட மாலத்தீவுக்கு பலநேரங்களில் பக்கலமாக இந்தியா இருந்து உள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியை தனது படைகளை அனுப்பி முறியடித்து மீண்டும் மாலத்தீவு அரசிடமே ஆட்சியை ஒப்படைத்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. அதேபோல் 1980 மற்றும் 1990 காலக்கட்டங்களில் மாலத்தீவில் உள்ள மருத்துவமனைக்கு 200 படுக்கைகள், தொழில் கருவிகளை இந்தியா வழங்கி உள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு மாலத்தீவில் சுனாமி தாக்கிய போது அந்நாட்டிற்கு உதவிய முதல் கரம் இந்தியாவின் உடையது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 500 மலிவு விலை வீடுகள், தொழில்நுட்ப தழுவல் மையம், சட்ட அமலாக்கம் மற்றும் காவல் துறைக்கான தேசியக் கல்லூரிகள், தலைநகர் மாலேவில் தண்ணீர் மற்றும் சுகாதார திட்டம், அட்டு அடோலில் சாலை மற்றும் நில மீட்பு திட்டம், சுற்றுலாத்துறை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் கீழ் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு பயிற்சி என பல்வேறு திட்டங்கள் மூலம் மாலத்தீவுக்கு 2 ஆயிரத்து 454 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு படையுடன் இணைந்து பல்வேறு போர்கால அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 22ஆம் தேதி உள்ளுர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அதிபர் முகமது முய்சு, முதல் முறையாக இந்தியாவுடனான தனது அணுகுமுறையை மென்மையாக கையாண்டு உள்ளார்.
மாலத்தீவிற்கு உதவி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது என்றும், மாலத்தீவில் அதிக அளவிலான திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் ஒப்புக்கொண்ட முய்சு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கடன் நிவாரண நடவடிக்கைகளை இந்தியா எளிதாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அபுதாபியில் நடந்த பருவநிலை மாற்றத்திற்கான ஐநாவின் மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பிற்காக பிரதமர் மோடிக்கு தனது பாராட்டை தெரிவித்து உள்ளார் முகமது முய்சு. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்த விரும்பவில்லை என்றும், மாறாக இந்தத் திட்டங்களை வலுப்படுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் முகமது முய்சு கூறி உள்ளார்.
மாலத்தீவில் இருந்து இந்திய பாதுகாப்பு படை வீரர்களை அகற்றுவது பற்றிய சர்ச்சைக்குரிய பிரச்சினையில், இந்த கொள்கை இந்தியாவை மையமாகக் கொண்டதல்ல என்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் என்றும் முகமது முய்சு தெரிவித்து உள்ளார்.
இந்திய விசுவாசியாக மாலத்தீவு அதிபர் திடீரென மாற என்ன காரணம் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் திடீர் பல்டிக்கு நான்கு காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதலாவதாக தற்போது உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியாவுக்கு 400 மில்லியன் டாலர் கடனை வெறும் 9 மாத இடைவெளியில் திருப்பிச் செலுத்துவது என்பது மாலத்தீவு அரசுக்கு இயலாத காரியம்.
இரண்டாவதாக மாலத்தீவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ள சீனா 130 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக அறிவித்து உள்ளது. அதேநேரம், அண்மையில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எதிர்காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு மாலத்தீவு செல்லக் கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து மேற்கொண்டு உதவும் நிலைப்பாட்டில் சீனா இல்லை என்பதை அறிந்து கொண்டதாக தெரிகிறது.
மூன்றாவதாக அண்மையில் சர்வதேச நாணய நிதியம் மாலத்தீவுக்கு அளித்த பொருளாதார எச்சரிக்கையால் இந்தியாவுடனான உறவில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் முகமது முய்சு தள்ளப்பட்டதாக தெரிகிறது. கடைசியாக, இந்தியாவுடனான உறவை கையாளுவதில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்று முகமது முய்சுவின் அரசியல் குரு முகமது சோலிஹ் வழங்கிய அறிவுரையிலும், உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடிற்கு தொடர்ந்து எதிர்ப்பு கொடி காட்டி வருவதும் கூட அதிபர் முகமது முய்சுவின் திடீர் மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தனது நாட்டின் நலனுக்காக அதிபர் முகமது முய்சு அண்டை நாடுகளுடன் எவ்வாறு நல்லுறவை பேணுப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க :டீப் பேக் தொழில்நுட்பத்தால் தனிநபர் தனியுரிமை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? - Deepfake Analysis