புதுடெல்லி:அன்று மிகவும் நெரிசலாக இருந்தது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தின் இந்தியன் ஏர்லைன்ஸ் கவுண்டர் அது. டெர்மினல் 1 முதல் 3 வரை மக்கள் மிகவும் ஆவேசமாக இருந்தனர். இந்தியன் ஏர்லைன்சின் ஐசி814 (IC 814 ) விமானம் கடத்தப்பட்டிருந்தது, அதன் பயணிகளின், மன்னிக்க திருத்தம்.. பணயக்கைதிகளாக இருந்தோரின் உறவினர்கள் தான் கோபமாக இருந்தனர். காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட விமானம் டெல்லியை வந்தடைய இத்தனை மணி நேரமாவது ஏன்? என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தொலைக்காட்சி சேனல்களில் வெளியான செய்திகளிலிருந்து அவர்களுக்கு உண்மை நிலை தெரிந்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் நேரடியான கேள்வியை எழுப்பும் தைரியம் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. இப்போது எனக்கான வாய்ப்பு வந்தது.
“ஐசி 814 விமானம் கடத்தப்பட்டிருந்தால் என்னிடம் கூறிவிடுங்கள்” என்றேன். எதிர்பாராத அந்த உண்மையின் வீச்சு அங்கு கனத்த மவுனத்தை பரிசளித்தது. 25 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். ஓடிடி தளத்தில் காந்தகார் விமானக் கடத்தல் டாகுமெண்டரியைப் பார்க்கும் போது, 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நிகழ்ந்த நினைவுகள் தற்போது சினிமாக் காட்சிகள் போன்று அலை அலையாக நினைவில் வருகின்றன.
டிசம்பர் 24ம் தேதி, 1999ம் ஆண்டு மாலைநேரம். டெல்லியின் லஜ்பத்நகரில் உள்ள கிருஷ்ணா மார்க்கெட் ஏரியாவில் உள்ள மொட்டை மாடியில் இருக்கும் ஒற்றை வீட்டில் தங்கியவாறு, டாகுமெண்டரி ஒன்றுக்கான எழுத்துப் பணிகளை தயாரித்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் விமான நிலையத்திற்கும் செல்லும் நேரம் வந்தது. என்னுடைய தந்தை காலஞ்சென்ற டாக்டர். கல்யாண் சந்திர புயான், ஐசி 814 (IC 814 )விமானத்தில் இருந்தார். காத்மாண்டு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த அவர், வருடம் தோறும் குளிர்காலத்தில் முதலில் டெல்லிக்கும் பின்னர் அங்கிருந்து அசாமிலிருக்கும் எங்கள் வீட்டுக்கும் வருவதை சம்பிரதாயமாகக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த குறிப்பிட்ட கிறிஸ்துமஸ் மாலை மிகச்சிறப்பானது. ஏனென்றால் என்னுடைய இளைய தம்பியின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் நாளன்று இருந்தது. ஓ மறந்துவிட்டேன் இரண்டு பிறந்த நாள் கொண்டாட்டம். எனக்கு இருப்பது இரட்டை சகோதரர்கள். இவர்களில் இளையவர் என்னுடன் டெல்லியில் தங்கியிருந்தார். மூத்தவர் அசாமில் இருந்தார். எங்களின் தாயார் டெல்லியில் எங்களுடன் தங்கியிருந்தார். நண்பர்கள், குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவிருந்ததால் எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.
இதையும் படிங்க:7 மணி நேர உக்ரைன் உரையாடலுக்கு 20 மணி நேர ரயில் பயணம்.. மோடி செல்லும் Train Force One-ல் என்ன இருக்கிறது?
சரி டிசம்பர் 24ம் தேதி 1999 மாலை நேரத்திற்கு மீண்டும் செல்லலாம். அந்நாட்களில் இணையதளம் இந்தியாவில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு போன் செய்து IC 814 விமானத்தின் நிலை குறித்து கேட்டேன். அது தாமதமாகிறது என்ற பதில்தான் எனக்கு கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக எனக்கு வந்த அழைப்பில் எனது அம்மாவின் தம்பியான மாமா அழைத்தார். அத்தான் (அக்காவின் கணவரை அசாமில் Bhindew என குறிப்பிடுகிறார்கள் ) வந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார். அவரது விமானம் தாமதமாவதாக நான் கூறினேன். மாமா எனது அப்பாவின் நல்ல நண்பர்.
பின்னர் தான் வந்தது மாமாவிடமிருந்து அந்த இரண்டாவது அழைப்பு. “அத்தானின் விமானம் கடத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்” என மாமா கூறினார். “தொலைக்காட்சியைப் பார்” மாமாவின் குரல் என்னை உலுக்கியது. நான் வேலை செய்து கொண்டிருந்த மேசையிலிருந்து உதறி எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தேன். நிச்சயமாக அது ஐசி 814 விமானம் குறித்த செய்தி கவரேஜ்தான். அடுத்து விமான நிலையத்தை நோக்கி விரைந்தேன்.
மீண்டும் சொல்கிறேன் 25 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், ஒரு வார காலத்திற்கு நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நாளையும் வரிசைப்படுத்தி நினைவு கூர்வது மிகவும் சிரமமானது. ஆனால் முயற்சிக்கிறேன், விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் தொலைக்காட்சியை ஆன் செய்தேன். தற்போதுவரை உண்மை நிலவரத்தை எங்கள் அம்மாவிடமிருந்து மறைத்து வந்தோம். உண்மை தெரிந்தால் அவர், அதிர்ச்சியடையலாம். அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால் எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை, தொலைக்காட்சியைப் பார்த்தாவது உண்மையை தெரிந்து கொள்ளத்தானே போகிறார். அவருக்கு நிலைமையை மெதுவாக எடுத்துக் கூறினோம்.
டெல்லியின் லஜ்பத் நகர் அந்நாளில் அசாமிய மாணவர்கள், இளைஞர் பட்டாளத்தால் நிறைந்திருந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்ததும், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக காத்திருந்தவர்கள் முன்னதாகவே எங்கள் குடியிருப்புக்கு வந்து விட்டனர். எங்களின் சிறிய வீடு அந்த கூட்டத்தால் நிறைந்திருந்தது. அசாமியர்கள் , வடகிழக்கு மாநிலத்தவர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் வசிப்போர், எங்கள் வீட்டின் உரிமையாளர் என அனைவரும் திரண்டு உணர்வு ரீதியான ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தனர்.
இத்தனை டென்ஷனுக்கும் இடையே என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு பாத்திரத்தை எடுத்து 20 முட்டைகளை அவிக்கத் தொடங்கினான். என்ன செய்கிறாய் என நான் கேட்ட போது, அவன் அமைதியாக பதிலளித்தான். “ கவலை வேண்டாம் அருணிம்தா நீங்கள் டிவியைப் பார்த்துக் கொண்டிருங்கள்.” என இது என்றும் மறக்க முடியாத நினைவு.
கிறிஸ்துமசிற்கு முந்தைய இரவில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அமிர்தசரசில் தரையிறங்கிய விமானத்தைக் காண்பித்தார்கள். என்னைச் சுற்றியிருந்தவர்கள் பாதுகாப்பு நிபுணர்களாக மாறி முனுமுனுக்கத் தொடங்கினர், விமானத்தின் சக்கரங்களில் சுட்டு அங்கேயே நிறுத்திவிட இதுதான் சரியான தருணம் என அவர்கள் கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. விமானம் மீண்டும் புறப்பட்டது, அடுத்த நிறுத்தம் லாகூர். நள்ளிரவு தாண்டியது, நாங்கள் கண்கொட்டாமல் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ இந்த விமானம் அடுத்து எங்கே செல்கிறது? துபாய்க்கா!
எங்கள் கண்கள் சோர்ந்து, தூக்கம் எங்களைத் தழுவியது. டிசம்பர் 25ம் தேதி காலை, கிறிஸ்துமஸ் நாள். என்னுடைய சகோதரர்களின் பிறந்த நாள். தொலைக்காட்சியை ஆன் செய்தோம். விமானம் எங்கே போனது? எல்லா இடத்தையும் கடந்து காந்தகார், ஆப்கானிஸ்தான்! அப்படியானால்! என்னுடைய அப்பாவும் IC 814 விமானத்தின் மற்ற பயணிகளும் தாலிபன் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்தில் உள்ளனர். இதுதான் எனது மூளையில் முதலில் உறைத்தது.
இதற்குள்ளாக விமானக் கடத்தல் குறித்து முதல் தகவலை வழங்கிய என் மாமா என் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார். இதே போன்று என் அப்பாவின் கடைசி தம்பியும் கவுகாத்தியிலிருந்து வந்து சேர்ந்திருந்தார்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் அந்நாளைய மத்திய அமைச்சர் அருண் சௌரி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். நான் அங்கே பத்திரிகையாளராக இல்லாமல், IC 814 விமான கடத்தல் குறித்த அக்கறை கொண்ட ஒரு நபராக ஆர்வத்துடன் அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். ஆனால், அங்கே நடந்தது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த இடத்தில் விமான பயணிகளின் உறவினர்கள் கோபத்துடன் குழுமியிருந்தனர்.
அடுத்து என்ன நடந்தது? ஊடகங்களின் செயல்பாடு என்ன?
இங்கே திரு சௌரி அவர்கள் சவுத் ஏசியா டெரரிசம் (The South Asia Terrorism ) இணையதளத்திற்கு எழுதியதை குறிப்பிட விரும்புகிறேன்:“கடத்தப்பட்ட IC 814 விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தகாரை அடைந்ததும், ஊடகங்கள் அனைத்தும் விமானப் பயணிகளின் உறவினர்களின் குரல்களை ஒலிக்கத் தொடங்கின. இந்த குழப்பத்தில் எனது சொந்த அறிவால் முடிவுகளை எடுக்க முடியவில்லை. முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள் மீது அதிகமான அழுத்தம் இருந்தது. கடத்தல்காரர்களின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானி தீவிரவாதிகளை விடுதலை செய்வது என்ற முடிவை எடுப்பதில், இந்த புற அழுத்தமும் முக்கியக் காரணியாக இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த கணமே, அதே செய்தித்தாள்கள் “தீவிரவாதிகளிடம் சரண்” என்ற வகையில் எங்களை சித்தரித்தன. இஸ்ரேலின் செயல்பாடுகளை உதாரணமாகக் காண்பித்து எங்களை ஒப்பிட்டார்கள். முன்பு உறவினர்களின் குமுறலை மட்டும் ஒளிபரப்பிய அதே ஊடகங்கள், “தீவிரவாதிகளிடம் பேரம் கூடாது” என்ற அமெரிக்காவின் கொள்கையை சுட்டிக்காட்டி எங்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.”
அன்று மாலையில் மிகவும் சோர்வாக வீடு திரும்பினேன். என்னுடைய வீட்டில் இருந்த என்னுடைய தம்பியும் அவரது நண்பர்களும் என்னிடம் கூறினார்கள் “அரூணிம் தா நாங்கள் இன்று போராட்டத்தில் பங்கேற்றோம்”
“என்ன போராட்டம்? யாருக்கு எதிராக போராட்டம்?” கேள்விகள் என்னிமிருந்து வெளிப்பட்டன. பணயக்கைதிகளை பத்திரமாக விடுவிப்பதை உறுதி செய்யாத அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினோம் என எனது தம்பி கூறினார். முதலில் நான் பேச்சற்றுப் போனேன். பின்னர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முஃப்தி முகமது சையதின் மகளான ரூபையா சையத் (Rubaiya Sayeed) பணயக்கைதியாக இருந்து 1989ம் ஆண்டு மீட்கப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தேன். அப்போது 5 தீவிரவாதிகளை விடுவித்து அவரை அரசு மீட்டது. அதனை நினைவு கூரும் போராட்டம் இது என்பது எனக்கு புலப்பட்டது. அன்றைய தேதியில் இது 10 ஆண்டுகளுக்கு முந்தையது.
மீண்டும் IC 814-க்கு வரலாம்! எனக்கு நினைவு இருக்கிறது, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த மமதா பானர்ஜி கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரை அழைத்து நிலைமையை அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் அழைத்தவர்களில் நானும் ஒருவன். அவர் பேசுகையில் பயங்கரமான உண்மையை அவர் சொன்னார்: விமானத்தின் அடிப்பகுதியில் கடத்தல் காரர்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்றார் அவர்.
இந்த உரையாடல் முடிந்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அவர் சூழலை மிகைப்படுத்திப் பேசுவதாக நான் நினைத்தேன். கடந்த 25 ஆண்டுகளாக இதைப் பற்றி நினைத்து நான் சிரித்திருக்கிறேன். ஆனால் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் வெப்சீரீசைப் பார்த்த பின்னர் தான் அவர் கூறியது உண்மை என தெரியவந்தது. இதை உணர்ந்த தருணம் எனது முதுகெலும்பு சில்லிட்டது.
உறவினர்கள் மருத்துவனையில் உடல்நலமின்றி இருந்தாலும் சரி, பணயக்கைதியாக விமானத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தாலும் சரி வழிபாட்டில் இறங்குவது வழக்கமானது தான். இதில் எனக்கும் , எனது குடும்பத்திற்கும் எந்த விதிவிலக்கும் இருக்கவில்லை. டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோயிலுக்கு என் அம்மாவும், தம்பியும் நண்பர்கள் உறவினர்களுடன் சென்று வழிபாடு நடத்திவிட்டு திரும்பினர். ஆர்.கே.புரம் பகுதியில் இருக்கும் செயிண்ட் தாமஸ் சர்ச்சுக்கும் சென்று வழிபட்டோம். இதே போன்று மற்ற பணயக்கைதிகளின் உறவினர்களும் செய்தார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதற்கிடையே, என்னுடைய நண்பர் ஒருவர் இந்திய அரசுக்கும், கடத்தல் காரர்களுக்குமிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து எனக்கு சில ரகசிய தகவல்களைக் கூறினார். அவருடைய நண்பரின் அப்பா பேச்சுவார்த்தைக் குழுவில் இருப்பதாகவும் அவர் கூறினார். முதலில் நான் இதை நம்பினாலும், இதில் சிறிதளவே உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுக்கவில்லை.