சென்னை: ரசிகர்கள் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதை கண்டு எமோஷனலாகிவிட்டேன் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என நடிகர் அஜித் கூறியுள்ளார்.
அஜிகுமார் ரேசிங்க் அணி: திரைப்படங்களில் நடிப்பால் அசத்தி வரும் நடிகர் அஜித்குமார், தமது பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஓட்டும் திறனால் விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு அஜித் குமார் ஃபார்முலா ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். எனினும் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு கார் பந்தயத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
எனினும் அண்மையில் அஜிகுமார் ரேசிங்க் என்ற அணியை அஜித் குமார் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த அணியில் அஜித்குமார் தவிர மேலும் மூன்று சர்வதேச கார் ரேஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.நடிகர் அஜித் குமாருடைய அஜித்குமார் ரேசிங் அணி துபாயில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் அஜித் பங்கேற்றார். இன்றும் அவர் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
அஜித்குமாருக்கு காயம் இல்லை: இந்த போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் அவர் ஓட்டி வந்த கார் வளைவில் மோதியது. இதனால் அதிகவேகத்தில் வந்த கார் தடுப்பில் மோதி சுற்றியது. ஆனால், உள்ளே அமர்ந்திருந்த அஜித் கவசங்கள் அணிந்திருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான காரில் இருந்து இறங்கிய அஜித்குமார், பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை என்று கூறினர். இதனைத் தொடர்ந்து தம்மை கவலையில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை அஜித்குமார் வெளியிட்டுள்ளார்.
Ak.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu
அதில், “எனது ரசிகர்கள் நேரில் போட்டியைக் காண வந்திருந்தனர். அதில் மிகவும் மகிழ்ச்சி, எமோஷனலாக இருந்தது. எனது ரசிகர்கள் அனைவரும் மன நிம்மதியுடன், சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டுகிறேன். அனைவரும் குடும்பத்தை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: எனது ரசிகர்களை எல்லையில்லாமல் நேசிக்கிறேன்.. துபாய் கார் பந்தயத்தில் அஜித்குமார்
ரசிகர்களுக்கு வேண்டுகோள்: நேரத்தை வீணடிக்காதீர்கள். படிப்பவர்கள் படிப்பில் கவன செலுத்துங்கள். வேலை செல்பவர்கள் கடுமையாக உழைத்து வேலை செய்யுங்கள். பிடித்த விஷயத்தைத் தைரியமாகச் செய்யுங்கள். வெற்றி கிடைத்தால் நல்லது. ஆனால் தோல்வியடைந்தால் சோர்ந்து போகிவிடாதீர்கள். எதிலும் போட்டி என்பது இருக்கத்தான் செய்யும், கவனமாக உறுதியுடன், ஒரு மனதாக அனைத்து செயலிலும் ஈடுப்படுங்கள்.
இந்த கார் பந்தயத்திற்கு பின் ஒரு டீமாக வேலை செய்துள்ளோம். எல்லாவற்றிலும் டீம் வொர்க் மிக முக்கியமானது. எனவே, ரசிகர்கள் யாரிடமும் சண்டை போட வேண்டாம். வாழ்க்கை மிகச் சிறியது, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்,"என்று கூறியுள்ளார். துபாய் கார் ரேசில் மட்டுமின்றி ஐரோப்பியாவில் நடைபெறும் ஐரோப்பிய 24H, போர்சே 992GT ஆகிய கார் ரேஸ்களிலும் அஜித்குமார் பங்கேற்க உள்ளார்.