விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பொங்கல் வைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் கோலப்போட்டி போன்ற பாரம்பரியம் மிக்க போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றை பார்வையிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், மாணவர்கள் உற்சாகத்துடன் இசைக்கப்பட்ட கேரள செண்டை மேளத்தின் இசைக்கேற்ப சிறுவன் ஒருவருடன் நடனமாடினார். இதனைக் கண்டு அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க: சீமானுக்கு கோமியத்தை அனுப்பி வைக்க போகிறோம் - நூதன போராட்டத்தை அறிவித்த திருமுருகன் காந்தி!
இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது விழா மேடையில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வாக்கியத்திற்கேற்ப தமிழன் தனக்கு பசி இருந்தாலும் பிறருக்கு உணவளித்து மகிழ்வான்.
அப்படி ஒரு சிறப்பை எடுத்துரைக்கும், தமிழர்களின் சிறந்த பண்டிகை தைப்பொங்கல். தமிழர் திருநாள் விழா மாணவர்களாகிய உங்களுக்கு மட்டுமில்லை, உங்கள் பெற்றோர்கள் மற்றும் இவ்வுலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்” என்றார்.
24 மணி நேரமும் அரசியல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் இது போல சிறுவர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்றது மாணவர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இது போல அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் சார்பில் இந்த கல்வி நிறுவனம் நடைபெற்று வருகிறது. கல்லூரிகளில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்கள், முக்கிய விழாக்களின் போது பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.