சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.01) மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், எட்டு நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயினால் இறக்கிறார்.
இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 75 விழுக்காட்டிற்கு மேல் ஹியூமன் பேப்பிலோமா வைரஸ்களின் (Human Papilloma Virus-HPV) தொற்றால் ஏற்படுகிறது. இந்த வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசியை 2 முறை வழங்குவதன் மூலமாக, இந்த வைரஸ் தொற்றால் உருவாகும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்.
உலகில் பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பூசி இலவசமாக வளரிளம் பருவப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்தத் தடுப்பூசி இதுவரை மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படவில்லை. தற்பொழுது மத்திய நிதி அமைச்சர், இந்த தடுப்பூசி வழங்குவது ஊக்கப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
வெறும் ஊக்கப்படுத்துவதனால் எந்த விதமான பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, மத்திய அரசின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இந்த HPV தடுப்பூசியை இணைத்து, முற்றிலும் இலவசமாக வளரிளம் பருவப் பெண்களுக்கு வழங்கிட வேண்டும். இந்த HPV தடுப்பூசியை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவில்லை. மாறாக, தனியார் நிறுவனம் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. விரைவில் இந்த HPV தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.