ஹைதராபாத்:ஜனநாயக நாட்டில் மக்களுக்கு நல்லாட்சியை உறுதிசெய்ய, பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் மிக முக்கியம். ஆனால் எதிர்க்கட்சிகளின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து கொண்டிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. இதில், எதிர்க்கட்சிகளின் அரசியல் அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் குரல் மங்கிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த முறை மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCP) மற்றும் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா (UBT) சிறப்பாக செயல்பட்டு சட்டப்பேரவையில் அதிக இடங்களை பிடிப்பார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
2024 தேர்தல் மாற்றங்கள்:2019 தேர்தலில், ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல ஒருங்கிணைந்த சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது சிவசேனா பாஜகவைச் சேர்ந்த கூட்டணியுடன் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ், இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து களம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 2024 தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஷிண்டேவின் சிவசேனா (SHS) 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மாறாக, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா (UBT) மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCPSP) மிக மோசமான தேர்தல் முடிவை சந்தித்துள்ளன. NCPSP வெறும் 10 இடங்களையும், சிவசேனா (UBT) 20 இடங்களை மட்டுமே தக்க வைக்க முடிந்துள்ளது.
தவறுகள் ஏற்படுத்திய தாக்கம்:சகோதரர் மகனான அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிளவால், சரத் பவார் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், தன் குடும்பம், குறிப்பாக மகள் சுப்ரியா சுலே மீது காட்டிய அன்பின் விளைவாக, அவரின் பாரம்பரியமும் கட்சியின் ஒருமைப்பாடும் பாதிக்கப்பட்டது.
அதேபோல், சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே, தனது கட்சியைத் தனக்கு சொந்தமெனக் கூறிய போதிலும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு மதிப்பான இடத்தை வழங்கி அவரை சமாதானமாக வைத்திருக்கவில்லை. இதன் விளைவாக, சிவசேனா பிளவுபட, ஏக்நாத் ஷிண்டே மக்களிடமிருந்து நேரடியாக ஆதரவைப் பெற்று தனது குரலை ஒலிக்கச் செய்தார். தனது உறவினர் ராஜ் தாக்கரேவுடனேனும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசியல் விளையாட்டில் அதுவும் சாத்தியமில்லாமல் போனது.
பாரம்பரியம் vs புதிய தலைமுறைகள்:மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் 2024 மீது சரத் பவார், உத்தவ் தாக்ரே மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதீத நம்பிக்கைகள் இருந்தன. இதனால் இவர்களின் மெத்தனம், உட்கட்சி பூசல்கள், வாக்காளர்களின் அதிருப்தியை தூண்டியது. இதன் விளைவாக பா.ஜ.க-வுக்கு மகாராஷ்டிராவில் அரசியல் களம் திறந்தவெளியானது.
இந்த தேர்தல் முடிவுகள் பாரம்பரியம் மற்றும் புதிய தலைமுறையின் மோதலை நேரடியாக வெளிப்படுத்தி இருக்கின்றன. மகள்களுக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் அரசியல் கனவுகளின் மீதான பொதுமக்களின் பார்வையும் இப்போது மாறிவிட்டது. உதாரணமாக, மக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையை பாரம்பரிய அரசியல் தளத்திற்கு மாறாக, உழைக்கும் நம்பிக்கையாக எடுத்துக்கொண்டனர்.
உட்கட்சி பூசலை பயன்படுத்தி சாதித்த பாஜக:என்னதான், பிரிந்துசென்ற ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிவற்றுக்கும் இந்த தேர்தலில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பா.ஜ.க பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியதால், இவர்களுக்கும் ஆபத்து தொற்றிக்கொண்டுள்ளது.