திருச்சியில் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாக துண்டித்து டாட்டூ போடுவது, கண்களில் நிறமிகளை பூசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த டாட்டூ கலைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, டாட்டூ செண்டருக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய திருச்சி டாட்டூ சம்பவத்தின் பின்னணி என்ன? இளைஞர்கள் டாட்டூ போட ஆர்வம் காட்டுவது ஏன்? டாட்டூகளை விரும்புவோரின் பின்னணியில் இருக்கும் உளவியல் மாற்றங்கள்? நாக்கை பிளவு படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இயற்கையான உடலை மாற்ற தூண்டுவது எது? என்பதை பற்றி நிபுணர்கள் கூறுவதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஹரிஹரன் நடத்தி வந்த டாட்டூ ஸ்டியோ (Credit - ETV Bharat) திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய கட்டிடத்தில் 'ஏலியன் டாட்டூ' என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருபவர் தான், 25 வயதாகும் ஹரிஹரன். தனது வாடிக்கையாளர்களுக்கு டாட்டூகளை போட்டு வந்த ஹரிஹரன், அவர்களை வித்தியாசமாக மாற்றுவதாக கூறி நாக்கை பிளவுப்படுத்தி நிறமூட்டுவது, கண்களில் நிறமிகளை சேர்த்து தோற்றத்தை மாற்றுவது போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
பாம்பு போல் நாக்கை துண்டிப்பது:மற்றவர்களை இவ்வளவு மாற்றும் ஹரிஹரன், தனது நாக்கையும் பாம்பு போல இரண்டாக துண்டித்து, அதில் டேட்டூ போட்டும், கண்களுக்கு ஊசி மூலம் செயற்கை நிறங்களை செலுத்தி, கண்ணின் நிறத்தை ஊதா நிறத்திற்கு மாற்றியுள்ளார். இவர், மற்றவர்களுக்கு போடும் டாட்டூவை தனது இன்ஸ்டா பக்கமான ஏலியன் இமோ டாட்டூவில் (Alien Emo Tattoo) பதிவிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி, ஹரிஹரன், இரண்டு வாடிக்கையாளர்களின் நாக்கை துண்டித்து அறுவை சிகிச்சை செய்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்த நிலையில், ஹரிஹரன் மற்றும் அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் (24) என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்தனர். கைதான இருவர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் சுருதி ஸ்ரீகுமார் (Credit - ETV Bharat Tamil Nadu) நாக்கை பிளவு படுத்துவதால் என்ன நடக்கும்?:"உடலில், நாக்கின் அமைப்பு பேசுவதற்கும், சுவைக்காவும் பயன்படுகிறது. இந்த செயலில், ஒருவர் பேசுவதற்கு மிக முக்கியமாக இருக்கும் நுனி நாக்கு பிளவு படுத்தப்படுவதால், பேச்சுத்திறன் மற்றும் சுவை திறனில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்" என்கிறார் சென்னை ரேலா மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் சுருதி ஸ்ரீகுமார்.
மேற்கொண்டு பேசிய மருத்துவர், "நாம் உணவை மென்ற பின் அதனை உணவுக்குழாய்க்குள் தள்ளுவதற்கு உதவுவது நாக்கு தான். இந்த செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உணவு உண்பதில் சிக்கல் ஏற்படும்". அதுமட்டுமல்லாமல், "நமது உடலில் அதிக இரத்த ஓட்டம் செல்லும் பகுதியான நாக்கில் அறுவை சிகிச்சை செய்யும் போது, நுண்ணியிரில் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது" என்றார்.
டாட்டூவில் ஆர்வம் ஏன்?: "இந்தியாவில் நாக்கு பிளவுப்படுத்தும் முறை சட்டவிரோதமானது. பயிற்சி பெற்ற மருத்துவர்களை தவிர யாரும் இதை செய்யக்கூடாது" எனவும் "தன்னை தானே அறிந்து கொள்வதற்கும், தன்னை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டவும் வெளிப்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு எளிமையாக இருக்கிறது" என 10 ஆண்டுகால டாட்டூ போடும் தொழிலில், தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த அனுபவத்தை, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார் மும்பையை சேர்ந்த டாட்டூ கலைஞர் சித்தார்த்.
Siddharath, Tattoo artist- Vibrating Ink, Mumbai (Credit - Siddharath) மீண்டும் மீண்டும் டாட்டூ போட ஆர்வம் வருவது ஏன்?: டாட்டூ போட ஆரம்பிக்கும் பலர், ஒன்றோடு நிறுத்தாமல் அடுத்தடுத்து டாட்டூ போட காரணம் என்ன? என சித்தார்திடம் எழுப்பிய கேள்விக்கு, "நமது அனைவரின் கையில் இருக்கும் மொபைலே ஒரு உதாரணம்" என்றார். "நீங்கள் கையில் வைத்திருக்கும் மொபைலின் அடுத்த மாடல் அல்லது மார்கெட்டில் புதிதாக மொபைல் அறிமுகம் செய்யப்பட்டால், அதை வாங்க வேண்டும், நம்மை அப்கிரேட் செய்ய வேண்டும் என யோசிப்போம். நம்மை மெருகேற்ற வேண்டும் என அனைவரும் நினனப்துண்டு, அதே தான் அவர்களுக்கும் பொருந்தும். தன்னை மெருகேற்றி கொள்ள, தனித்துவமாக இருக்க என்ன வழியோ அதில் பயணிக்கிறார்கள்" என்கிறார் சித்தார்த்.
கண்களில் நிறமூட்டுதல்:தனது நாக்கை பிளவுப்படுத்துக்கொண்ட ஹரிஹரன், தனது கண்களில் நிறமூட்டி பச்சை குத்தியுள்ளார்.இதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.கண்களில் நிறமிகளை செலுத்துவது நிரந்தரமான கண் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார் மும்மை, வொக்கார்ட் மருத்துவமனையின் கண், மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் ஷீத்தல் ராடியா. "இது நிரந்தர குருட்டுத்தன்மை, தொற்று நோய், கருவிழி பாதிப்பு, வீக்கம், விழித்திரையில் கடுமையான சேதம், கிளௌகோமா மற்றும் கண் இழப்பு போன்ற நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.
கண்களில் நிறமூட்டி டாட்டூ குத்தியுள்ள ஹரிஹரன் (Credit - Alien Emo Tattoo Insta Page) இயற்கையாக உடலை மாற்றும் நோக்கம்: "சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களை, ஐ-போன் வைத்திருப்பவர்களை இந்த உலகம் சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது. யார் ஒருவர் இந்த மாதிரியான தனி கண்ணோட்டத்தில் இருந்து விலகி தூரத்தில் இருக்கிறார்களோ, அவர்களே தனது உடல் அமைப்பை மாற்றி அனைவரின் கண்ணோட்டத்திற்கும் வர முயற்சிக்கிறார்கள். இது நான் என் அனுபவத்தில் இருந்து புரிந்து கொண்டது" என்கிறார் சித்தார்த்.
தொடர்ந்து பேசியவர், "அதுமட்டுமல்லாமல், சிறுவயதில் இருந்து தனித்து விடப்பட்ட, அல்லது மற்றவர்களிடம் அதிகம் பழகாமல், பேச தயங்கி, வசதிகள் இல்லாமல் வளர்ந்த பலரும் உடல் அமைப்பை மாற்றுகிறார்கள். அனைவரும் முன்னுக்கு வர வேண்டும், தனியாக தெரிய வேண்டும் என நினைப்பதை போல், அவர்களும் நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுப்பது வேறு பாதையே தவிர மற்ற எதுவும் கிடையாது" என்றார்.
டிரண்டிங் டாட்டூஸ்: "5, 6 வருடங்கள் முன்பு வரை டாட்டூ என்றால், நடிகர்கள் அல்லது முன்னுதாராமாக நினைப்பவர்கள் பின்பற்றி, அவர்களை போல டாட்டூ போட்டுக்கொண்டார்கள். இதே இன்று, ஒவ்வொருவரின் மனநிலை, அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த ஆரம்பித்து, தனக்கான டாட்டுகளை அவர்களே டிஸைன் செய்கிறார்கள்" என்றார்.
நாக்கை மீண்டும் இணைக்க முடியுமா?: உடல் அழகுக்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ கொள்கைபடி அனுமதி இல்லை எனக்கூறும் மருத்துவர் சுருதி, "மருத்துவத்துறையில் நாக்கை பிளவு படுத்தும் அறுவை சிகிச்சை இன்றைய நாள் வரையில் கிடையாது. அப்படியே இருந்தாலும், மருத்துவர்களுக்கு எந்த இடத்தை துண்டிக்க வேண்டும் என்பது தெரியும். இரத்த நாளங்கள் இல்லாத பகுதி எது? எங்கு துண்டித்தால் இரத்த கசிவு ஏற்படாது? என்பதை அறிந்து மருத்துவர்கள் செயல்படுவார்கள்.
நாக்கின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டால், நாக்கில் உள்ள செல்கள் இறந்து, நாக்கு செயலிழக்காமல் (Nekrosis) போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் சர்ஜியன் அல்லது காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை தவிர மற்றவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது பிளவு பட்ட நாக்கை இணைப்பது மிகவும் கடினம். நாக்கை பிளவுப்படுத்தும் செயலில் பக்க விளைவுகள் மட்டுமே உள்ளன. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்த மாதிரியான செயல்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
மருத்துவர் சுருதி ஸ்ரீகுமார் (Credit - ETV Bharat Tamil Nadu) டாட்டூ ஸ்டியோவை தேர்ந்தெடுப்பது எப்படி?: "சுவற்றில் வரையும் ஓவியத்தை போல் இது வெறும் கலையாக மட்டும் பார்க்கக்கூடாது. மனிதர்களின் உடலில் வரையப்படுவதால் பல சுகாதார மற்றும் ஆரோக்கிய நலனை சார்ந்து உள்ளது. டாட்டூ போட வேண்டும் என நினைப்பவர்கள், முறையாக பயிற்சி எடுத்த அல்லது அனுபவமிக்க டாட்டூ கலைஞர்களை மட்டும் அனுக வேண்டும்" என்கிறார் டாட்டூ கலைஞர் சித்தார்த்.
இதையும் படிங்க:மனநலத்தை பாதிக்கும் காற்றுமாசு! காரணம் என்ன? - POLLUTION AND MENTAL HEALTH