ஆன்மீக பூமி என்றழைக்கப்படும் இந்தியா, வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டுமில்லாமல் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு தாயகமாக உள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில்களை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு.
இதற்காகவே, ப்ளான் செய்து விடுமுறை நாட்களில் பலரும் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவார்கள். அந்த வகையில், 2025ம் ஆண்டில் இந்த 10 புனிதத் தலங்களுக்கு சென்று, அதன் அழகு மற்றும் பக்தியில் மூழ்குங்கள். வரலாற்றை தெரிந்து கொள்ள நினைப்பவர்களும், அமைதியை பெற நினைப்பவர்களும் இந்த கோயில்களுக்கு சென்று புதிய அனுபவத்தை பெறுங்கள்.
மீனாட்சி அம்மன் கோயில், மதுரை (Meenakshi Amman Temple): இந்தியாவின் மிகச் சிறந்த கோயில்களில் ஒன்றாக இருப்பது, தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான். ஆச்சரியமூட்டும் திராவிட கட்டிடக்கலை மற்றும் துடிப்பான சிறபங்களை கொண்ட மீனாட்சி அம்மன் கோயிலை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த கோயிலில், மீனாட்சி தேவி மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். திராவிட கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாக இருக்கும் இந்த கோயிலை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விடுங்கள். சிறந்த அனுபவத்தை பெற, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத் திருவிழாவின் போது சென்று வாருங்கள்.
பொற்கோயில், அமிர்தசரஸ் (Golden Temple):பொற்கோயில் என்றழைக்கப்படும் ஹர்மந்திர் சாஹிப், பஞ்சாபில் உள்ள ஆன்மீக புகலிடமாகும். தங்க முலாம் பூசப்பட்ட முகப்பு மற்றும் இங்குள்ள அமைதியான குளம் புது அனுபவத்தை தரும். அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் இந்த கோயில், சமத்துவத்தையும் அமைதியையும் பிரதிபலிக்கிறது. இந்த கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை மறக்காமல் சாப்பிட்டு வாருங்கள்.
திருப்பதி, ஆந்திரா (Tirupati temple): ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பது ஏழுமலையான் கோயில், உலகின் பணக்கார கோயில் மற்றும் அதிகமான மக்கள் பார்வையிட்ட கோயிலாக இருக்கிறது. உலகில் பல்வேறு மூலைகளில் இருந்து பெருமாளை தரிசிக்க மக்கள் குவிகின்றனர். கோயிலின் சடங்குகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைகள், இந்த கோயிலை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகிறது. இங்கு, வழங்கப்படும் பிரசாதமான லட்டுவை கண்டிப்பாக சுவைத்தும் அன்புக்குரியவர்களுக்கு வாங்கி செல்லுங்கள்.
பூரி ஜகன்னாதர் கோயில், ஒடிசா (Puri jagannath Temple): ஒடிசாவில் உள்ள ஒரு முக்கிய யாத்திரைத் தலமான ஜெகநாதர் ஆலயம் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை திருவிழாவிற்கு பிரபலமானது. ஜகந்நாதருக்கு (கிருஷ்ணரின் ஒரு அவதாரம்) அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் பிரமாண்டமான அமைப்பு மற்றும் வியக்க வைக்கும் சிற்பங்கள் பண்டைய இந்திய கைவினைத்திறனுக்கு சான்றாகும்.
அக்ஷர்தாம் கோயில், டெல்லி( Akshardham Temple) : இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் இந்த கோயில் உலகில் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. சுவாமி நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயிலில், கலை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், பிராத்தனை கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கோயிலுக்கு சென்று வந்தால் புதுமையான அனுபவத்தை நிச்சயமாக பெறுவீர்கள்.