'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் பழமொழிக்கு ஏற்ப தை மாதம் பிறந்தால் நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கி விடுகின்றன. தை முதல் நாளே பொங்கல் பண்டிகை என்பதால், அதிகாலையில் எழுந்து பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது தமிழர்களின் மரபு. அதிலும், பொங்கல் திருநாளில் வைக்கப்படும் சர்க்கரை பொங்கல், ஆண்டு முழுவதும் தித்திப்பான அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டு தை பொங்கல் நாளில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது? அதுவும், பொங்கல் பானையில் எப்படி செய்வது என்பதை காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப் (250 கிராம்)
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- காய்ச்சாத பால் - 1/2 கப்
- தண்ணீர் - 5 1/2 கப்
- கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- பொடித்த வெல்லம் - 2 கப்
- ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
- பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
- நெய் - 1/2 கப்
- முந்தரி பருப்பு - 10
- தேங்காய் - 2 டீஸ்பூன்
- உலர் திராட்சை - 2 டீஸ்பூன்
சர்க்கரை பொங்கல் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து ஒரு முறை தண்ணீரில் கழுவி, பின்னர் ஊறவைத்து விடுங்கள்.
- இப்போது, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஒரு முறை தண்ணீரில் கழுவி, ஊறவைத்த அரிசியோடு சேர்த்து குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அதே போல், ஒரு கிண்ணத்தில் கடலைப் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- 20 நிமிடங்களுக்கு பின், மண் பானை அல்லது வெண்கல பொங்கல் பானையில் பால், அரிசி மற்றும் பருப்பு ஊறவைத்த தண்ணீர் 1 கப் மற்றும் ஐந்தரை கப் தண்ணீர் ஊற்றவும்.
- இப்போது, இந்த பொங்கல் பானையை அடுப்பில் வைத்து பால் மற்றும் தண்ணீர் பானையை சுற்றி சமமாக பொங்கி வரும் வரை கொதிக்க விடவும்.
- பால் பொங்கி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊறவைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும். அதனுடன், கடலை பருப்பையும் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விடவும்
- அரிசி, பருப்பு நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அடுப்பை கம்மியான தீயில் வைத்து வெள்ளம் சேர்த்து கிளறவும். அதனுடன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய் துருவியது மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறிவிடவும்.
- கால் கப் நெய் சேர்த்து பொங்கல் கட்டியாகும் வரை கிளறி பானையை தனியாக வைக்கவும்.
- இப்போது, அடுப்பில் வாணலியை வைத்து கால் கப் நெய் ஊற்றி முந்திரி, பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து உலர் திராட்சையை சேர்க்கவும். அனைத்தும் நன்கு வறுபட்டு வந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறினால், கோயில் சுவையில் இருக்கும் பாரம்பரியமான சர்க்கரை பொங்கல் ரெடி. மறக்காம செய்து பாருங்கள்.
இதையும் படிங்க:
மணக்க மணக்க கோயில் புளியோதரை செய்வோமா?..பக்குவமா பொடி இப்படி அரைங்க!
மீதமான சாதத்தில் 'மொறு மொறு வடை'..5 நிமிடம் இருந்தால் சுடச்சுட ஸ்நாக்ஸ் ரெடி!