தென்னிந்திய மக்களின் பாரம்பரிய மற்றும் பிரதான உணவாக அரிசி உள்ளது. தினசரி ஒரு வேளையாவது அரிசி உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், பலருக்கும் அவர்களின் உணவும் நாளும் முழுமை அடையாத நிலை ஏற்படும். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியை சரியாக சமைத்து உண்கிறோமா? என்பதே நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.. அதன்படி, அரிசி சமைக்கும் போது, நாம் தவிர்க்க வேண்டிய சில முறைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழுவாமல் சமைப்பது: நீங்கள் எந்த வகையான அரிசியை சமைத்தாலும், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், சமைப்பதற்கு முன் அதை கழுவ வேண்டும். ஒன்று முதல் மூன்று முறை ஓடும் தண்ணீரில் கழுவுவதால் அரிசியின் மேற்பரப்பில் உள்ள மாவு தன்மை நீங்கும். இதனால், சில நேரங்களில் சமைத்த பின் ஏற்படும் பிசுபிசு தன்மையை ஏற்படாமல் இருக்கும்.
ஊற வைக்காமல் சமைப்பது: சமையலை வேகமாக முடிக்க வேண்டும் என நினைத்து, பலரும் அரிசியை ஊற வைக்காமல் சமைக்கின்றனர். இதனால், வேலை சீக்கிரமாக முடிந்தாலும், ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெல் வளரும் போது, பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் தானியங்களுக்கும் பரவுகிறது. இதனால், சமைப்பதற்கு 15 முதல் 20 முன் அரிசியை ஊறவைத்து கழுவி சமையல் செய்வது அவசியம். குறிப்பாக, அரிசியை ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரியான அளவு தண்ணீர்: சாதம் சமைப்பதில், தண்ணீரின் அளவு மிகவும் முக்கியமானது. தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருந்தால், அரிசி கஞ்சியாகவும், குறைவாக இருந்தால், சாதம் விதை விதையாக இருக்கும். அதனால்தான் போதுமான அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் அல்லது ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. தண்ணீரின் அளவு ஒவ்வொரு அரிசியை பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.