கண்களை அழகுபடுத்த, கண் மை, காஜலைப் பயன்படுத்துவது இன்றைய காலத்து பெண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒட்டுமொத்த முக அழகை மெருகேற்ற கண்களை மட்டும் அழகுபடுத்தினால் போதும் என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை தான்.
அந்த வகையில், அந்த காலம் பெண்கள் முதல் இந்த காலத்து பள்ளி, கல்லூரி முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை, தங்களை அழகுப்படுத்த அவர்கள் பயன்படுத்துவது கண் மை. ஆரம்பத்தில் கண் மை மட்டுமே இருந்த நிலையில், இன்று, ஐ லைனர், காஜல், மஸ்காரா, ஐ ஷேடோ என கண்களை அழகுப்படுத்த பல பொருட்கள் பெருகிவிட்டன.
இது அழகை அள்ளி தந்தாலும், தினசரி இதனை பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்தை பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பொருட்களில் உள்ள ரசாயனங்கள் கண்ணின் மேற்பரப்பில் குவிந்து காலப்போக்கில் கண் சம்பந்தபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதிலும், இன்று பலரும் செய்யும் தவறு என்னவென்றால், காலையில் போட்ட காஜலை மறுநாள் குளிக்கும் போது தான் அகற்றுகிறார்கள். இது நாள்பட கண் சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- கண்களில் அழகுப்பொருட்களை பயன்படுத்தி அதனை முறையாக பராமரிக்காமல் விட்டால் கண்களில் அரிப்பு, எரிச்சல் முதல் கண் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
- கண்களை சுற்றி வீக்கம், அதாவது பிங்க் ஐ தொற்று பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, இரவு தூங்க செல்வதற்கு முன் கண் மேக்கப்பை அகற்ற வேண்டும். தற்போது, மேக்கப் போடுவதற்கு மட்டுமல்ல, அதை அகற்றுவதற்கும் மார்கெட்டில் பல பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், கண்களை இந்த கெமிக்கல் ரசாயனங்கள் மூலம் சுத்தப்படுத்தாமல், வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து மேக்கப்பை அகற்றலாம்.
- வழக்கமான மேக்கப்பை அகற்றப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயை, கண் மேக்கப்பையும் அகற்ற பயன்படுத்தலாம். இதற்கு, முதலில் ஒரு காட்டன் பேடில் சில துளிகள் தேங்காய் எண்ணெயைத் தடவி, கண் இமைகள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் மெதுவாகத் தேய்த்து மேக்கப்பை அகற்றவும். இந்தச் செயல்பாட்டில் கண் இமைகளில் காட்டன் ஸ்வாப்பைப் பயன்படுத்தினால், கண்களுக்குள் மேக்கப் துகள்கள் படிவதை தடுக்கலாம்.
- ஜெல்/பவுடர்/கிரீம் சார்ந்த மேக்கப் பொருட்களை முழுவதுமாக அகற்றுவதில் பெட்ரோலியம் ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயல்பாட்டில், கண்களைச் சுற்றி சிறிது ஜெல்லை தடவி, ஆள்காட்டி விரலால் வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் நனைத்த பஞ்சைப் பயன்படுத்தி அந்தப் பகுதியைத் துடைக்கவும்.
- ஒரு காட்டன் பேடில் சிறிது பேபி ஆயிலைத் தடவி, மேக்கப்பை எளிதாக அகற்ற, மெதுவாகவும் கண்களைச் சுற்றி வட்ட இயக்கத்தில் தேய்க்கவும்.
- கண் இமைகளில் பூசப்படும் மஸ்காராவை அகற்றும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில், தேங்காய் எண்ணெய்/பேபி ஆயிலில் ஒரு காட்டன் ஸ்வாப்பை அல்லது காட்டன் பட்ஸை நனைத்து, மேக்கப்பைக் கீழே இருந்து மேலே, மஸ்காராவைப் பயன்படுத்துவது போல் அகற்றவும். இதன் விளைவாக, மஸ்காரா முற்றிலும் அகற்றப்பட்டு கண்களுக்குள் செல்லாது.
- சிலர் முகத்தில் மேக்கப் போடுவது போலவே கண்களிலும் அதிகமாகவும் தடிமனாக கண் மை அல்லது ஐ லைனர் போடுகிறார்கள். இது கண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் கண் மேக்கப்பை எவ்வளவு எளிமையாகவும் குறைவாகவும் போடுகிறீர்களோ, அந்த அளவிற்கு கண் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: மழைக்காலத்திற்கு ஏற்றவாறு எப்படி மேக்கப் போடனும்னு தெரியுமா?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.