மதுரை: முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்த தாசில்தாரின் உத்தரவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரப்பிள்ளைகள் பார்த்துக்கொள்வதால் முதியோர் பென்சன் வழங்க உத்தரவிட முடியாது என்று தாசில்தார் கூறிவிட்டதற்கு, நீதிமன்றம் முக்கியமான கருத்தை தெரிவித்து மனுதாரருக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சின்னக்காளை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "முதியோர் பென்சன் வழங்குவது தொடர்பாக ஆண்டிப்பட்டி தாசில்தார் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, தனக்கான முதியோர் பென்சன் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், " மனுதாரர் 83 வயதானவர். ஆண்டிப்பட்டி தாசில்தார் மனுதாரரை அவரது பேரப்பிள்ளைகள் கவனித்துக் கொள்வதால் அவருக்கு முதியோர் உதவித் தொகையை வழங்க இயலாது எனக் கூறி மனுவை நிராகரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் சாதி பார்த்து அனுமதிக்கும் நடைமுறை ஒருபோதும் கிடையாது - மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!
அவர், அவரது உறவினர்களுடன் வசித்து வரலாம். ஆனால், முறையாக பராமரிக்கப்படாமலும், அவருக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையிலும் இருக்கலாம். ஆகவே, அவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவது தொடர்பான உத்தரவை ரத்து செய்த ஆண்டிப்பட்டி தாசில்தாரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி முதல் முதியோர் பென்சனை அவருக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.