திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு 13 வயதுடைய பள்ளி சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகியுள்ள சிறுமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தேடுதல் பணியை நிறுத்தியுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ஐவரில் மூன்று பேரை மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது பள்ளி சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து நீரில் மாயாமாகியுள்ள மற்றொரு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசராணையில், பொங்கல் விடுமுறை கொண்டாடுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாக அர்ஜுனன் மற்றும் ஐயப்பன் என்பவர்கள், அவர்களது குடும்பத்தினர் 15-க்கும் மேற்பட்டோருடன் நேற்று (ஜனவரி 16) வியாழக்கிழமை, திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்க்குளம் பகுதியில் உள்ள அவர்களது நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை முக்கூடலில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நாக அர்ஜுனனின் மகள் வைஷ்ணவி (வயது 13) மற்றும் ஐயப்பன் என்பவரின் 16 வயதுள்ள மகள் உள்பட 5 பேர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். பிள்ளைகள் ஆற்றில் குளித்து குதுகலமாக இருந்ததை பெரியவர்கள் கரையில் இருந்து கண்காணித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா ஷாரோன் ராஜ் கொலை வழக்கு; காதலி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு!
எனினும், சற்றும் எதிர்பாராத நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த 5 பேரையும் ஆற்று நீர் இழுத்துச் சென்றுள்ளது. இதில், பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நீரில் அடித்துச்சென்ற 5 பேரை மீட்க போராடியுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், சிறுமி வைஷ்ணவி மற்றும் ஐயப்பனின் 16 வயதுமிக்க மகள் ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் 15 பேர் கொண்ட குழு, முக்கூடல் பகுதி தன்னார்வலர்களுடன் இணைந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை தேடியுள்ளனர். இதில் முதற்கட்டமாக, வைஷ்ணவி என்ற சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து நீரில் மாயமாகியுள்ள மற்றொரு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கூடல் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த நிலையில், சிறுமியை பறிகொடுத்த சம்பவம் குடும்பத்தினிரிடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்புத்துறையினர் நீரில் மாயமான சிறுமியை தேடி வந்த நிலையில், தற்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், தற்காலிகமாக தேடுதல் பணியை நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து நாளை காலை மீண்டும் தேடுதல் பணி தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.