சென்னை: ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சமபவத்தில், கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்த நபரைக் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் ஊற்றிய சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த இளைஞர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாமக இளைஞர்கள் இரண்டு பேர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விசிகவை சேர்ந்தவர்களும் அனுதாபிகளும் ஆவர்.இது திடீரென்று நடந்த சம்பவம் கிடையாது. காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மாநிலமாக மாறி இருக்கிறது. என் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இது போன்ற கொலை வெறி தாக்குதல் அதிக அளவில் நடைபெறுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
பொறுமைக்கும் எல்லை உண்டு:
இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பிரேம் என்கிற இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. ஆனால், காவல்துறை அவனை கண்டு கொள்ளாமல் உள்ளது. கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது.
முதலமைச்சர் இந்த சம்பவத்தில் நேரடியாக தலையிட வேண்டும். எப்பொழுதும் போல் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. யார் குற்றவாளி ? என்று கண்டறிய வேண்டும். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
என்ன சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் நடக்கிறது? முதலமைச்சர் எதற்கு காவல்துறை வைத்திருக்கிறார்? அவரால் செயல்பட முடியவில்லையென்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடலாம். எங்கு பார்த்தாலும் கொலை, இதனை தடுத்து நிறுத்துகிற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.