தமிழகத்திற்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், நம் நினைவுக்கு முதலில் எட்டுவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். என்ன தான் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இது போன்ற இடங்களுக்கு சென்று ஆராவாரத்துடன் இருந்தாலும், சில நேரங்களில் நமது மனம் அமைதியை தேடும். அப்படி, மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும், பெரும்பாலான மக்கள் அறியாத இந்த 6 இடங்களை பற்றி பார்ப்போம்..
ஜவ்வாது மலை (Javadi/Jawadhu Hills) : இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், போக்குவரத்து நெரிசல் என்றால் என்ன? என்று கேட்கும் அழகிய கிராமங்கள், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள் என ஜவ்வாது மலையில் இருக்கும் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே இருக்கலாம்.
Javadi Hills (Credit- ETVBharat) கிழக்கு தொடர்ந்து மலைப்பகுதியில், ஒரு புறம் செய்யாறும், மறுபுறம் அகரம் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ள ஜவ்வாது மலை காண்போரை கட்டாயம் பரவசமடையச் செய்யும். மலைக்கு மேல் பீமன் நீர்வீழ்ச்சி, மேற்குப்பகுதியில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, வடக்கு பகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சி இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், ஆசியாவின் பெரிய அடித்தண்டு கொண்ட நீர்மரம் இங்கு தான் உள்ளது. குறைந்தது 20 மாணவர்கள் கை கோர்த்தால் தான் இந்த அடித்தண்டை கட்டிப்பிடிக்க முடியும் என்றால் நம்பமுடிகிறதா?. இம்மலைக்கு வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து செல்லலாம். அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்குள் ட்ரிப் செல்ல பிளான் இருந்தால் கட்டாயமாக இங்கு சென்று வாருங்கள்.
Tharangambadi (Credits - GETTY IMAGES) தரங்கம்பாடி (Tharangambadi): மக்களின் கால் தடம் அதிகம் படியாத இடங்களில் ஒன்று இந்த தரங்கம்பாடி. மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்ல விரும்புவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 1602ம் ஆண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
காரணம், இது வங்க கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க் காரர்களின் கோட்டை. இது டேனிஷின் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இங்கு, டேனிஷ் அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ மாசிலாமணிஸ்வரா கோயில் போன்ற இடங்கள் உள்ளது. நவம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையே பார்வையிட சிறந்த இடம் இது.
Sirumalai (Credits - GETTY IMAGES) சிறுமலை(Sirumalai): அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆண்டு முழுவதும் இதமான காலநிலையைக் கொண்ட சிறுமலை தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் . கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருக்கின்றன.
மலையின் உச்சிக்கு செல்ல, நீங்கள் 18 கொண்டை ஊசி வளைவுகள் கடக்க வேண்டும். கடைசி வளைவை எட்டியதும், இயற்கை எழில் கொஞ்சும் மற்றும் மனதிற்கு அமைதியை தரும் தேவாலயத்தைக் காணலாம். மேலும் திண்டுக்கல் நகரத்தின் அற்புதமான காட்சியையும் பார்த்து ரசிக்கலாம். அக்டோபர் முதல் மார்ச மாதங்களுக்கு இடையே இங்கு செல்வதற்கு ஒரு பிளான் போடுங்க.
Pichavaram (Credit - TN Govt Website) பிச்சாவரம் (Picchavaram): நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து விலகி வேறொரு உலகிற்கு உங்களை கடத்திச் செல்லும் இந்த இடம். இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநில காடுகளுக்கு பெயர் பெற்ற இந்த இடம், குறுகிய நீர்வழிகள் வழியாக கண்ணுக்கினிய படகு சவாரிகளை வழங்குகிறது. அமைதியான சூழாலில் ஓய்வெடுக்கவும், இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த இடமாகும்.
Auroville (Credit- auroville.org) ஆரோவில் (auroville): விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில்லின் இதமான காலநிலை மற்றும் இணக்கமான குடியிருப்பாளர்கள் உங்களது மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும். ஆரோ கடற்கரையில் மாலை பொழுதை கழிப்பது புதிய அனுபவத்தை தரும். தியானம், யோகா, ஆயுர்வேதம் என அமைதியை விரும்புவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.
Tharangambadi (Credits - GETTY IMAGES) தனுஷ்கோடி (Dhanushkodi): 1964 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் சூறாவளியின் போது அழிக்கப்பட்ட ஒரு நகரம் தான் தனுஷ்கோடி . இந்த இடம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில எல்லையாக உள்ளது. தனுஷ்கோடியில், பழைய தேவாலயம் மற்றும் ரயில் நிலையத்தின் இடிபாடுகளைக் காணலாம். இருகடல் சங்கமிக்கும் இப்பகுதியில், சூரிய உதயம், சூரியன் மறையும் காட்சிகளை ஹாயாக அமர்ந்து ரசிக்கலாம்.
இதையும் படிங்க:டிராவலில் வாந்தி வராமல் இருக்க என்ன செய்யலாம்?..சூப்பர் டிப்ஸ் இதோ..!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்