மாஸ்கோ (ரஷ்யா):கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியந்து போய் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இப்பயணத்தின் முக்கிய அம்சமாக, தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், "இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் முதல்முறையாக உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவை உலக பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடு என்ற உயரிய இடத்துக்கு கொண்டு வர, தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நான், மும்மடங்கு வேகத்துடன் பணியாற்றி வருகிறேன்.
மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதன் ஓர் அடையாளமாக,. நாட்டில் உள்ள ஏழைகள் மூன்று கோடி பேருக்கு வீடுகள் கட்டித் தரவும், மூன்று கோடி கிராமப்புற ஏழைப் பெண்களை லட்சாதிபதிகள் ஆக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது முதல் லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது வரை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோமீட்டர்கள் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஜி20 மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.
இந்திய மண்ணின் நறுமணத்தை ரஷ்யாவுக்கு கொண்டு வந்துள்ளேன். இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
இதையும் படிங்க: தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்- அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் செய்தி என்ன?