மாண்டினீக்ரோவ்: இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
"மாண்டினெக்ரின் மேற்கு பகுதியில் செடின்ஜே நகரில் உள்ள மதுகூடத்தில் நேரிட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் 45 வயதான அகோ மார்டினோவிக் என்ற நபர் மதுபான பாரின் உரிமையாளர், பார் உரிமையாளரின் குழந்தைகள், குடும்பத்தினரை சுட்டுக்கொன்றுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த நபர் தமக்கு தாமே தலையில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரிழந்தார்,"என உள்துறை அமைச்சர் டானிலோ சரனோவிக் கூறியுள்ளார்.
தலைநகர் போட்கோரிகாவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள செடின்ஜே நகர் முழுவதும் காவல்துறையினரின் சிறப்புப்படையினர் குவிக்கப்பட்டு, துப்பாக்கி மனிதனை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் உள்ளே செல்லும் வழிகள் அனைத்தும் காவல்துறையினரால் தடுப்புகள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.
தாக்குதல் குறித்து பேசிய காவல்துறை ஆணையர் லாசர் ஸ்கெபனோவிக்,"தாக்குதலின் தீவிரத்தை பாக்கும்போது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களை விட இது போன்ற மனிதர்கள் மேலும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். செடின்ஜே நகரில் உள்ள மதுபான பாரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அகோ மார்டினோவிக் என்ற நபர் வீட்டுக்குச் சென்று துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளார். பாரில் உள்ள நான்கு பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார். பாரில் இருந்து வெளியேறியவர் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஒரு வாகனத்தில் ஏறி தப்பி சென்றிருக்கிறார்,"என்றார்.
இதையும் படிங்க: போர்வெல் குழிக்குள் இருந்து 10 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!
துப்பாக்கியால் சுட்ட நபர் ஏற்கனவே வன்முறை நடத்தை காரணமாக 2005ஆம் ஆண்டு தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அந்த நபர் மேல் முறையீடு செய்திருக்கிறார். அந்த நபர் தீவிரமான வன்முறை எண்ணம் கொண்ட நபர் என்று அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர் ஜகோவ் மிலடோவிக்,"இந்த சம்பவம் அதிர்ச்சியளி்கிறது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்துக்கு பதிலாக அப்பாவி உயிர்கள் பலியாகியதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளோம்,"என்றார். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை பிரதமர் மிலோஜ்கோ ஸ்பாஜிக் சந்தித்து ஆறுதல் கூறினார்.