லண்டன்: இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கிலாந்தில் எப்போது இரண்டு பிரதான கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும்.
அதன்படி தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 431 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. YouGov MRP என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற வென்ற 263 தொகுதிகளை காட்டிலும் 100 இடங்கள் வரை குறைவாக கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 430க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் எட் டேவே தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சி 72 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் 14 அண்டுகளுக்கு பின்னர் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை இழப்பது தெரியவந்து உள்ளது.
மேலும் பொலிட்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி மெஜாரிட்டிக்கு தேவவையான 212 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. New Statesman வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் கன்சர்வேடிவ் கட்சி 17 முதல் 174 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர் கட்சி 368 முதல் 475 இடங்கள் வரை வெற்றி வாகை சூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லிபரல் ஜனநாயக கட்சி 45 முதல் 83 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிரதமர் ரிஷி சுனக் போட்டியிட்டுள்ள ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் தோல்வியை தழுவுவார் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் போட்டியிட்டு வரும் ரிஷி சுனக் இந்த முறை தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவுவார் எனக் கூறப்பட்டுள்ளது. பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் கன்சர்வேடிவ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியினால் மக்கள் அவரை நிராகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் பெரும்பாலானோர் வெள்ளை மக்கள் என்பதாலும் அவருக்கு வாக்குகள் விழுவதில் சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை சொந்த தொகுதியில் ரிஷி சுனக் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பிரிட்டன் அரசியல் வரலாற்றில் பிரதமராக இருந்து தோல்வியை தழுவியை முதல் தலைவர் என்ற மோசமான வரலாறை ரிஷி சுனக் படைப்பார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது முதல் பலவேறு பொருளாதார நெருக்கடிகளை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. மேலும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதாரத்தை நிலையாக வைத்துக் கொள்ள தவறியது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கியுள்ளனர். மேலும் இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியினர் வெற்றி பெற்றால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்ற அட்டூழியங்கள் குறித்து குரல்கள் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நேபாளத்தில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? 16 ஆண்டுகளில் 13 முறை ஆட்சி கவிழ்ப்பு! - Nepal Government Dissolve