பெய்ரூட்:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் ஹமாஸ் இயக்கத்தின் யாஹ்யா சின்வார். இவரை நேற்று இஸ்ரேல் படையினர் கொன்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் இயக்கத்தினர் 1200க்கும் மேற்பட்டோரை கொன்றனர்.250க்கும் மேற்பட்டோரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இது இஸ்ரேலை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் என்பவர். இவரை கொல்வதற்காக இஸ்ரேல் பல்வேறு திட்டங்களை தீட்டியது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு கடந்த சில நாட்களில் அதாவது நேற்று யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படையினர் கொன்றுள்ளனர்.இது குறித்த வீடியோவையும் வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த யாஹ்யா சின்வார் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
அகதிகள் முகாமில் பிறந்தவர்:இஸ்ரேல் நாட்டின் படையால் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் கடந்த 1962ஆம் ஆண்டு காசாவின் கான்யூனுஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஆயிரகணக்கானோர் அங்கு தங்கி இருந்தனர். 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவராக யாஹ்யா சின்வார் இருந்தார்.அப்போது இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருந்த கடற்பகுதியில் ரகசியமாக நடக்கும் ஹமாஸ் கூட்டங்களில் பங்கேற்றார்.
ஹமாஸ் இயக்கத்தின் நிறுவனரான ஷேக் அகமது யாசிடம் நெருங்கி பழகிய சின்வார், அவரிடம் ஒருமுறை, ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த சிலர் இஸ்ரேலுக்கு உளவு சொல்பவர்களாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் களையெடுக்க வேண்டும். அப்போதுதான் வலுவான இயக்கமாக ஹமாஸை முன்னெடுக்க முடியும் என்று கூறினார். அதன்படி சின்வார் தலைமையில் மஜித் என்ற பாதுகாப்பு அமைப்பை ஹமாஸ் தொடங்கியது.
1980ஆம் ஆண்டு இஸ்ரேலால் சின்வார் கைது செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற விசாரணையில் இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்த 12 பேரை கொன்றதாக ஒப்புக் கொண்டார். மேலும் இரண்டு இஸ்ரேல் படை வீரர்களை கடத்தி கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சகோதரரை கொன்றவர் :சின்வாரிடம் விசாரணை மேற்கொண்டவர் இஸ்ரேலின் ஷின் பெட் பாதுகாப்பு அமைப்பின் விசாரணையகத்தின் முன்னாள் இயக்குனர் மைக்கேல் கோவ்பி என்பவராவார். இவர் சின்வார் குறித்து பேசியபோது, இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக சொந்த தம்பியை சந்தேகத்தின் பேரில் கொன்றவர் சின்வார். இது குறித்து அவர் என்னிடம் விவரித்தபோது அவரது முகம் பிரகாசமாக இருந்தது,"என்று கூறியுள்ளார்.