மாஸ்கோ:எந்தவொரு பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலமே அமைதிக்கான தீர்வு எட்டப்படும் எனவும் இந்திய தரப்பில் ரஷ்யாவிடம் எடுத்துரைக்கப்படும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்திய உயர்நிலை குழுவும் அவருடன் ரஷ்யா சென்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மோடி ரஷ்யாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக மோடி, புதின் தலைமையிலான இந்தியா - ரஷ்யா உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம், தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது, நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பேணிகாப்பதில், ஐ.நா.வின் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்று எடுத்துரைக்கப்படும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, "நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட எந்தவொரு விஷயத்திலும் பிரச்னை எழும்போது அதற்கு போர் ஒருபோதும் தீர்வாகாது. அமைதி மற்றும் ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்" என்பதை இந்திய தரப்பில் ரஷ்யாவிடம் எடுத்துரைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்தியூ மில்லர் திங்கள்கிழமை கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர், "ஹங்கேரி பிரதமர் ஓர்பன் அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியை சந்தித்துப் பேசினார். அவரை போன்றே, ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் அமைதி தீ்ர்வு ஏற்பட இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கும் எந்தவொரு முயற்சிகளை அமெரிக்கா வரவேற்கிறது," என்று தெரிவித்திருந்தார்.
மேலும், "உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு ஏற்படாதபடி, ஐ.நா. விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளின்படி, இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று ரஷ்யாவை இந்தியா அறிவுறுத்தும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனவும் மில்லர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு விருந்து வைத்து பாராட்டிய புடின்.. ரஷ்யாவில் கிடைத்த உற்சாக வரவேற்பு!