மாஸ்கோ:அமெரிக்காவில் வைத்து காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பனுனை இந்திய உளவுத் துறையான ரா கொல்ல முயற்சித்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டது. இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் அதிருப்தியை தெரிவித்தது.
இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பனுன் கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா குரல் எழுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரிய ஷக்ரோவா, குர்பத்வந்த் சிங் பனுனை இந்தியா கொல்ல திட்டமிட்டதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், அதற்கான போதிய ஆதாரங்களை இன்னும் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
குர்பத்வந்த் சிங் பனுனை கொல்ல இந்தியா முயற்சித்ததாக உத்தேசமாக கூறப்படும் விவகாரத்தில் அமெரிக்கா ஆதாரங்களை வழங்காததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மரிய ஷக்ரோவா தெரிவித்தார். உரிய ஆதாரங்களின்றி இந்தியா மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் தேர்தலை பாதிக்கக் கூடும் என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், அந்நாடின் தேசிய சூழல் மற்றும் வளர்ச்சியின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அமெரிக்கா பேசுவது இந்தியாவை அவமதிப்பதாகவும் அவர் கூறினார்.
மத உணவுர்களை மீறுவது உள்ளிட்ட அமெரிக்காவின் வழக்கமான ஆதாரமற்ற குற்றச்சாட்டு இந்தியாவின் தேசிய நலன் மீதான தவறான புரிதலை எதிரொலிப்பதாக கூறினார். அமெரிக்காவின் செயல் நியோகாலனித்துவ மனநிலை, காலனித்துவ காலத்தின் மனநிலை, அடிமை வர்த்தகம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிலிருந்து வந்தது என்றும் இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலை சிக்கலாக்கும் வகையில், அந்நாட்டின் உள் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மரிய ஷக்ரோவா தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பனுனை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 2வது நாளாக ரத்து! பயணிகள் கடும் அவதி! - Air India Express Flights Canceled