சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக ஒருங்கினைப்பாளருமான தமிழிசை செளந்தரராஜன். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து தமிழக பாஜகவிற்கு புது ரத்தம் பாய்ச்சபட்டுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியை நோக்கி பாரதிய ஜனதா கட்சி வேகமாக செல்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரசின் வாலாக இருக்கிறார். இதனால் தான் கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்த போது, நீட் தேர்வு குறித்து அவர்கள் எதுவுமே பேசவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது பேசுகிறார்கள். டங்ஸ்டன் விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்று அனைத்திலும் தமிழக உரிமையை விட்டு கொடுத்து விட்டு திமுக நிற்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உண்மையிலேயே மிக மோசமான நிலையில் தமிழக பள்ளிகளின் நிலை உள்ளது" என்று பதில் அளித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னை தமிழக ஒருங்கினைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நியமித்திருப்பதாக கூறிய அவர், மக்களுக்கு பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் மிகுந்த பயனுள்ளதாக ஒரே நாடு ஒரே தேர்தல் அமையும் என்பதை கருத்தரங்கு, கூட்டம், நாடகங்கள் மூலம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "பொது சிவில் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் புரிந்து ஆதரித்து வரும் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் அனைத்திற்கும் எதிர்வினையாற்றி வருவதாக" குற்றம்சாட்டினார்.