லண்டன்: கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் இருந்து, ஆஸ்திரேலியாவிற்கு சரக்கு விமானம் வழியாக, 57 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள, 512 கிலோ எடையுள்ள கோகோயின் (Cocaine) போதைப் பொருள் ஏற்றுமதி செய்ததாக, இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 2021இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி வந்த, 57 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை ஆஸ்திரேலிய எல்லைப்படை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து தேசிய குற்றவியல் நிறுவனத்தின் (NCA - National Crime Agency) புலனாய்வு அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர்.
ஈலிங்கில் உள்ள ஹன்வெல்லில் இருந்து ஆர்த்தி தீர் (வயது 59), கவல்ஜித்சிங் ரைஜாடா (35) ஆகியோர் இந்த சம்பத்திற்கு தொடர்புடையவர்களாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்த குற்றத்தை தாம் செய்யவில்லை என்று மறுத்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய உலோக கருவி பெட்டியின் (Tool Box) பிளாஸ்டிக் உறைகளில் கவல்ஜித்சிங் ரைஜாடாவின் கைரேகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது மட்டுமில்லாமல், 2 ஆயிரத்து 855 பவுண்டுகள் மதிப்புள்ள கருவிப்பெட்டிகளின் ஆர்டர்களுக்கான ரசீதுகளும் கவல்ஜித்சிங் ரைஜாடாவின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீர் மற்றும் ரைஜாடா போதைப்பொருள் கடத்தலை மட்டும் நோக்கமாக கொண்டு Viefly Freight Services என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள சவுத்வார்க் க்ரவுன் நீதிமன்றத்தில், இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், ஆர்த்தி தீர் மற்றும் கவல்ஜித்சிங் ரைஜாடா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜன.30) இவர்களுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சவுத்வார்க் க்ரவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீர், மார்ச் 2003 முதல் அக்டோபர் 2016 வரையிலும், ரைஜாடா மார்ச் 2014 முதல் டிசம்பர் 2016 வரையிலும் ஹீத்ரோவில் உள்ள விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் விமான நிலைய சரக்கு பற்றி அறிந்திருப்பர் என்று கூறப்படுகிறது.