டெல்லி: ஸ்லோவாக்கியாவின் ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ராபர் பிகோ மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஏறத்தாழ 4 முறை அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதில் ராபர்ட் பிகோவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளை தோட்டக்கள் துளைத்தன.
குண்டு காயம் ஏற்பட்டு தரையில் சுருண்டு விழுந்தவரை அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராபட் பிகோ வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், அதேநேரம் அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஸ்லோவாக்கியா துணை பிரதமர் தெரிவித்து உள்ளார்.
வயிறு மற்றும் மூட்டு பகுதிகளை துப்பாக்கி குண்டுகள் துளைத்ததால் அந்த காயங்களால் அவருக்கு தீவிரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்த போலீசார், என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், எதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஸ்லோவாக்கியா பிரதமராக இருந்து வரும் ராபர்ட் பிகோ (வயது 59) இயல்பாகவே ரஷ்யா சார்புடையவர் எனக் கூறப்படுகிறது.