மொகடிஷு (சோமாலியா): கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தாவின் (Al-Qaida) பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான அல் ஷபாப் (Al-Shabab) போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றை ஒழிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷூவின் பிரபல லிடோ கடற்கரையில் உள்ள தனியார் ஹோட்டலில், வெள்ளிக்கிழமை அன்று குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 63 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தியதாக, அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலை அல்-கொய்தாவின் துணை அமைப்பான அல்-ஷபாப் நடத்தியதாக வானொலி மூலம் தெரிவித்துள்ளது.