மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்தின் இந்துஸ்தான் ஜிங்க் என்ற துணை நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான மத்திய அரசின் ஏல அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சட்டப்பேரவையில் தீர்மானம்: இந்நிலையில், மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
மத்திய அரசின் முடிவு: ஆனால் இதற்குப் பிறகு மத்திய அரசு, தமிழக அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.
கோபத்தில் மக்கள்: மத்திய அரசின் இந்த முடிவு, மேலூர் பகுதி மக்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கிய நிலையில் இப்பகுதியில் கனிமச் சுரங்கம் அமையும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதியை மோத்தமாக 'பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு வேளாண் மண்டலமாக' அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அரிட்டாபட்டி, கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், மேலூர் வணிக கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினர்.
பேரணி போராட்டத்திற்கு திட்டம்: இந்நிலையில், கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மேலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 7ஆம் தேதி மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்கள், உழவர்கள், வணிகர்கள் என அனைவரையும் திரட்டி நரசிங்கம்பட்டி பெருமாள்மலையில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, அஞ்சல் அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் நேற்றைய தினம் (ஜனவரி7) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு - ஸ்தம்பித்தது மதுரை!
16 கி.மீ. தூரம் நடந்து சென்று போராட்டம்: அவர்களை தடுத்து கம்பித்தடுப்புகள், கயிறு தடுப்புகள் கொண்டு நிறுத்துவதற்கு காவல்துறை முயற்சி செய்தும், போராட்டகாரர்கள் நரசிங்கம் பெருமாள்மலையிலிருந்து பேரணியாக சுமார் 16 கி.மீ. தூரம் நடந்து, பிற்பகல் 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தை அடைந்தனர். அங்கு தமுக்கம் மைதானம் எதிரே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடையாளமின்றி அரசியல் தலைவர்களும் போராட்டம்: இந்த போரட்டத்தில் 1000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வணிகர் அமைப்புகளும், விவசாயச் சங்கங்களும், அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இப்போராட்டத்தில் எந்தவித அடையாளமுமின்றி பங்கேற்றன.
இந்த போராட்டத்தின் போது பேசிய சிஐடியு தொழிற்சங்கத்தின் மேலூர் பகுதித் தலைவர் மணவாளன், “அரிட்டபாட்டியை மட்டுமன்றி, மேலூர் பகுதியை அழிக்கும் நோக்குடன் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. டங்ஸ்டன் கனிமம் மட்டுமே எடுக்கக்கூடிய திட்டமாக நாங்கள் இதைப் பார்க்கவில்லை.
“தமிழர் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி”: தமிழர் பண்பாடு, கலாச்சாரம், தொன்மையை அழிக்கக்கூடிய முயற்சியாக பார்க்கிறோம். மத்திய அரசு முற்றிலுமாக இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பேரணியில் பல்வேறு வகையிலும் எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டன. அதை மீறியும் பாதுகாப்பான முறையில் மதுரை வந்து சேர்ந்துள்ளோம். காவல்துறை அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி” என்றார்.
“இந்தியாவே திரும்பிப் பார்த்துள்ளது”: இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் கூறுகையில், “ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
“அடுத்த கட்டம் டெல்லியாக இருக்கும்”: மேலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த டங்ஸ்டன் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ளன. ஏறக்குறைய 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதற்கட்டமாக 5 ஆயிரம் ஏக்கருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கடந்த 2 மாதங்களாகவே அமைதி வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு இப்போதே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமாகும். வருங்காலத்தில் எங்களது போராட்டத்தின் இலக்கு டெல்லியாகக் கூட இருக்கலாம். இன்று நடைபெற்ற போராட்டம் மிகக் கண்ணியமான முறையில், காவல்துறையின் ஒத்துழைப்போடு நடைபெற்று முடிந்துள்ளது.
“தீர்மானத்தோடு முடிந்துவிட்டதாக தமிழக அரசு நினைக்காதீர்கள்”: சட்டப்பேரவை தீர்மானத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக மாநில அரசு எண்ணக்கூடாது. ஒட்டுமொத்த மதுரை மாவட்டத்தையும் 'பாதுகாக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாகவும்', முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும்' அறிவிக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
“போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது”: அதற்கான நடவடிக்கையாக தற்போது நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அரசிதழையும் வெளியிட வேண்டும். இந்தப் போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது. இன்றைய போராட்டம் ஒரு சிறிய அடையாளமே” என்றார்.
இந்நிலையில் இந்த பேரணி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.