தஞ்சாவூர்: இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் விமர்சையாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே சுவாமி மலை, சுவாமிநாத சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து, தங்கக் கவசம் வைரவேலில் அருள்பாலிக்கும் மூலவர் சுவாமிநாத சுவாமியை தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டு வருகின்றனர்.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப் பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில். இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப் பெற்ற கட்டுமலைக் கோயிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ’ஓம்’ எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம்.
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படை வீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் பத்தாம் நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பிறகு தங்க கவசம் வைரவேலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க அவரை, பல்லாயிரக்கணக்கானோர், நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வந்து பால் குடங்கள், காவடிகள் எடுத்து வந்தும், அர்ச்சனைகள் செய்தும் தீபங்கள் ஏற்றியும் வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவாக, காவிரியாற்றுக்கு செல்ல அங்கே தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று, நிறைவாக 11ஆம் நாளான நாளை 12ஆம் தேதி புதன்கிழமை யதாஸ்தானம் சேர்தலுடன் இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: தைப்பூச திருவிழா: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில்! - THAIPUSAM IN TIRUCHENDUR
அதேபோல் முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலிலும் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க வைர ஆபரண அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்படி வழியாக விரதமிருந்து உடலில் முழுவதும் அலகு குத்தியும், மயில் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, மற்றும் முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தும், மாட வீதியில் முருகன் பக்தி பாடலுக்கு நடனமாடியும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு காவல் ஆய்வாளர் மதியரசன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.