தெஹ்ரான்: கிழக்கு ஈரானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோ மீட்டர் (335 மைல்) தொலைவில் உள்ளது தபாஸ். இங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று பிற்பகலுக்குப் பின்னர், மீத்தேன் கசிவால் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது அங்கு 70 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இவர்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து அறிந்த அப்பிராந்திய அரசு அதிகாரிகள், அவசரகாலப் பணியாளர்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 5% மட்டுமே வித்தியாசம்.. இழுபறியில் நிற்கும் திசநாயகே வெற்றி.. இலங்கை அதிபர் தேர்தலில் திருப்பம்!
எண்ணெய் உற்பத்தியில் பிரதானமாக ஈடுபட்டுள்ள ஈரான் பல்வேறு வகையான கனிம வளத்தையும் கொண்டுள்ளது. ஈரான் ஆண்டுக்கு சுமார் 3.5 மில்லியன் டன் நிலக்கரியைப் பயன்படுத்துகிறது. ஆனால், அந்நாடு சுரங்கங்களிலிருந்து சுமார் 1.8 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே வெட்டியெடுக்கிறது. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ஈரானில் நிலக்கரி பெரும்பாலும் அந்நாட்டின் எஃகு ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ஈரானில் சுரங்க விபத்து இது முதல் நிகழ்வல்ல. கடந்த 2017ல் நிகழ்ந்த நிலக்கரிச் சுரங்க விபத்தில் 42 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2013-ல் இரண்டு வெவ்வேறு சுரங்கங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 11 தொழிலாளர்களும், 2009ஆம் ஆண்டு பல சம்பவங்களில் 20 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். சுரங்கப் பகுதிகளில் பாதுகாப்பு தர நிலைகள் மற்றும் போதிய அவசர சேவைகள் இல்லாதது பெரும்பாலும் உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.