அபுதாபி: இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மேற்காசிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார், பிரதமர் மோடி. அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பளித்துள்ளது. அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நாயான் மரியாதை நிமித்தமாக ஆரத்தழுவி வரவேற்றார்.
அபுதாபியின் பாப்ஸ் (BAP'S) அமைப்பினரால் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் என்னும் முதல் இந்துக் கோயிலை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று (பிப்.13) மாலை சையீத் விளையாட்டு மைதானத்தில் நிகழவிருக்கும் 'அஹலான்', அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் வினய் குவாதாரா ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மேற்காசிய நாடுகளின் சுற்றுப்பயணம் குறித்த திட்டமிடலை, கடந்த 10ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், இரு நாடுகளுக்கான உறவை மேம்படுத்தும் வகையில் முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்ப மேம்பாடு, கலாச்சாரம் போன்ற நாட்டின் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஆகியவற்றிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நாயான் ஆகிய இருவரும், இருநாடுகளின் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய எட்டு ஒப்பந்தக்களை முன்னிலைப்படுத்தி கலந்துரையாடினர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் உறவுகள் மேம்பட பெரும் பலமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.