ரியோடி ஜெனிரோ:ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளும் விண்வெளி, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது பற்றி இருவரும் விவாதித்தனர்.
நைஜீரியாவில் இரண்டு நாள் பயணத்தை முனித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் சந்தித்துப் பேசினார். பிரேசில், சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இம்மானுவேல் மெக்ரானை சந்தித்தபோது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தபட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எனது நண்பரான அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்திக்கும்போது எப்போதுமே அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். விண்வெளி, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இருநாட்டின் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசித்தோம்," என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?
இந்த சந்திப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சியாக உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு என்பது உயர்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா சென்றபோது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் விவாதித்தேன். அதே போல முக்கியமான சர்வதேச விஷயங்கள் குறித்தும் பேசினோம்," என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோர் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜி20 பிரேசில் உச்சி மாநாட்டின் இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை முன்னெடுப்பது குறித்து விவாதித்தனர். வர்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பது குறித்தும், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இணைந்து பங்களிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆலோசித்தனர். இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்,"என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்