டெய்ர் அல்-பாலா (காசா ): காசாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கான் யூனிஸ் நகரில் தரைவழியே இஸ்ரேல் படைகளின் தாக்குதல் நடத்தின. இதில் உயிரிழந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் உடல்கள் அங்குள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறினர்.
காயம் அடைந்தோரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எனவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். இது குறித்து பேசிய ஐரோப்பிய மருத்துவமனையின் செவிலியர் துறை தலைமை அதிகாரியான மருத்துவர் சலே அல்-ஹம்ஸ், "எங்கள் மருத்துவமனை தவிர நசீர் மருத்துவமனைக்கும் காயமடைந்தோர் அதிகாலை 3 மணி முதல் கொண்டுவரப்பட்டனர். காயமடைந்தோர் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளது. கான் யூனிஸ் நகருக்குள் மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் தரைப்படையினர் ஊடுருவதற்காக கவனத்தை திசை திருப்பும் வகையில் இஸ்ரேல் வான் வழியாக கடுமையாக தாக்குதல் நடத்தியது," என்றார்.
இதையும் படிங்க :ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை; இஸ்ரேலுக்கு ரஷ்யா கடும் கண்டனம்
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத்தினர் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் 41,000த்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.