அட்லாண்டா (அமெரிக்கா):பென்சில்வேனியாவில் (சனிக்கிழமை) நடைபெற்ற பேரணியின் போது, திரளான மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், டொனால்ட் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆனால், இதில் துரதிஷ்டவசமாக பார்வையாளர் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, மற்றொரு பார்வையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரை அங்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதனிடையே, இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறு காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அவரை சூழ்ந்து கொண்டு பத்திரமாக நிகழ்ச்சி மைதானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் டிரம்பின் பேரணியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ட்ரம்ப்பின் காதில் குண்டு உரசி சென்றதன் விளைவாக, அவரது காதிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் தீவிர விசாரணை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், தற்போது ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்க ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து குக்லீல்மி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூலை 13 அன்று மாலை பென்சில்வேனியாவில் டிரம்ப் பேரணியில் ஒரு சம்பவம் நடந்தது. ரகசிய சேவை பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பாக உள்ளார். "இது இப்போது செயலில் உள்ள ரகசிய சேவை விசாரணை மற்றும் மேலும் தகவல் கிடைக்கும் போது வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கொண்டு வந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா! - resolution in un general assembly