நைரோபி:கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய பகுதிகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ளம் நீர் சூழ்ந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப் பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது.
தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 45 பேர் வரை பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன 49 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். காணும் இடம் எல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறி உள்ளனர்.